டி.ராஜேந்தரை நேரில் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரித்தார்!

டி.ராஜேந்தர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து, அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

பிரபல இயக்குனரும், நடிகர் சிம்புவின் தந்தையுமான டி.ராஜேந்தர் உடல்நலக் குறைவு காரணமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவர் இயக்குனர், நடிகர், பாடலாசிரியர், கலை இயக்குனர், தயாரிப்பு, மேலாளர் மற்றும் பின்னணி பாடகர் என பன்முகம் காட்டியவர். அவருக்கு இருதயத்திற்கு செல்லக்கூடிய ரத்தக் குழாய், வால்வுகளில் அடைப்பு ஏற்பட்டு அதன் காரணமாக தொடர் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், உடல்நலக்குறைவால் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நடிகர் டி.ராஜேந்தரை மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து, உடல்நலம் குறித்து விசாரித்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். மேலும், மருத்துவர்களிடம் அவருக்கு தேவையான சிகிச்சை அளிக்கும்படி அறிவுறுத்தியுள்ளார். திமுகவில் எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கி ஆட்சியில் இருந்த நேரத்தில், டி.ராஜேந்தர், அவரை எதிர்த்து திமுகவில் இணைந்தார். எம்ஜிஆருக்கு எதிராக கடும் பிரச்சாரம் செய்து திமுக தொண்டர்களிடம் தனி செல்வாக்குப் பெற்றவர் டி.ராஜேந்தர். 1989ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காததால் திமுகவை விட்டு வெளியேறினார். பின்னர் 2004ல் லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் எனும் கட்சியைத் தொடங்கினார். ஆனாலும், கருணாநிதி மீது அபிமானம் கொண்டவராகவே இருந்தார். நான் ஏற்றுக்கொண்ட ஒரே தலைவர் கருணாநிதி தான் என்றும் பலமுறை கூறியுள்ளார் டி.ராஜேந்தர். இந்நிலையில்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் டி.ராஜேந்தரை சந்தித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.