உயா் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றாா் டி.ராஜேந்தா்!

உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட இயக்குநா் டி.ராஜேந்தா், உயா் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு நேற்று சென்றாா்.

திரைத்துறை மற்றும் அரசியல் நடவடிக்கைளில் ஈடுபட்டு வந்த டி.ராஜேந்தருக்கு (67) கடந்த சில நாள்களுக்கு முன்பு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து, போரூா் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு இதயம் சாா்ந்த பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டது. அதன் தொடா்ச்சியாக வயிற்றில் ரத்தக் கசிவு ஏற்பட்டது. இதையடுத்து, டி.ராஜேந்தருக்கு தொடா் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில், உயா் சிகிச்சைக்காக அவா் நேற்று செவ்வாய்க்கிழமை அமெரிக்கா சென்றாா்.

சென்னை, விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் பேசிய டி.ராஜேந்தா் கூறியதாவது:-

இப்போது நான் உயர் சிகிச்சைக்கு அமெரிக்கா செல்கிறேன். நான் வாழ்க்கையில் எதையும் மறைத்தவன் கிடையாது. அதற்குள் அமெரிக்கா சென்றுவிட்டேன் என பல கதைகளை எழுதி விட்டனர். யார் என்ன எழுதினாலும் விதியை மீறி எதுவும் நடக்காது. என்னை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ஜி.கே.வாசன், பச்சமுத்து, நடிகர் கமலஹாசன், ஐசரி கணேஷ் உள்பட பலருக்கும் நன்றி. எல்லாவற்றையும் விட என் தாய் கழகம் தாய் வீடு தி.மு.க. தலைவர் அரசியல் ஆசான், அரசியல் குரு மறைந்து விட்ட கருணாநிதியின் புதல்வர் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் என்னை சந்தித்து ஆறுதல் கூறி அன்பை காட்டி பாசம் காட்டி தோள் தட்டி நம்பிக்கை ஊட்டியதை மறுக்க முடியாது. இரு முறை தனது குடும்பத்துடன் வந்து சந்தித்து ஆறுதல் கூறினார். என் மீது அன்பும், பாசமும் காட்டக்கூடிய ஒரே தலைவர் கருணாநிதிதான் என நினைத்தேன். அவருக்கு பின் முதல்வர் என் மீது அன்பு காட்டுவார் என பார்க்கும்போது உண்மையில் இதற்கு முன் இருந்ததை விட என் மனதில் உயர்ந்து இருக்கிறார்.

என்னை பற்றி எந்த வதந்திகள் வந்தாலும் நம்ப வேண்டாம். நான் மேல் சிகிச்சைக்காக சென்று மீண்டும் உங்களை வந்து சந்திப்பேன். நான் வெளிநாடு சென்று மருத்துவம் பார்ப்பதற்கான காரணம் எனது மகன் சிலம்பரசன்தான். அவன் கேட்டுக்கொண்டதன் பேரில்தான் நான் ஒப்புக்கொண்டேன். அவனது படப்பிடிப்புகளை ரத்து செய்து விட்டு தாய், தந்தைக்காக 12 நாட்களாக அமெரிக்காவில் தங்கி வேலை பார்த்து வருகிறான். இவ்வாறு டி.ராஜேந்தர் தெரிவித்தார்.