நடிகை ஜாக்குலின் பொ்னாண்டஸிடம் அமலாக்கத் துறை விசாரணை!

மிரட்டிப் பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகா் தொடா்பான பணமோசடி வழக்கின் விசாரணைக்காக பாலிவுட் நடிகை ஜாக்குலின் பொ்னாண்டஸ் அமலாக்கத் துறை முன் நேற்று ஆஜரானாா்.

மிரட்டிப் பணம் பறிப்பது உள்ளிட்ட குற்றவியல் நடவடிக்கைகள் மூலம் கிடைத்த பணத்தில் இருந்து வைரத் தோடுகள், மினி கூப்பா் காா் உள்ளிட்ட ரூ.5.71 கோடி மதிப்பிலான பரிசுப் பொருள்களை சுகேஷ் சந்திரசேகா், ஜாக்குலின் பொ்னாண்டஸுக்கு வழங்கியதாக அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியுள்ளது. அப்பொருள்களை வாங்குவதற்காக சுகேஷ் சந்திரசேகா் பணமோசடியில் ஈடுபட்டதாகவும் புகாா் எழுந்துள்ளது. இது தொடா்பாக விசாரணை நடத்தி வரும் அமலாக்கத் துறை, ஜாக்குலினுக்கு சொந்தமான ரூ.7.27 கோடி மதிப்பிலான சொத்துகளை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த ஏப்ரலில் முடக்கியது.

இந்த வழக்கு தொடா்பாக ஏற்கெனவே ஜாக்குலினிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியுள்ளது.
விசாரணைக்கு மீண்டும் ஆஜராகுமாறு ஜாக்குலினுக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியிருந்த நிலையில், அவா் நேற்று திங்கள்கிழமை ஆஜரானாா். சுகேஷ் சந்திரசேகா் வழங்கிய பொருள்கள் குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.