நடிகை மீனாவின் கணவர் சென்னையில் நேற்று இரவு மரணம் அடைந்தார்.
சிவாஜி கணேசன் நடித்த ‘நெஞ்சங்கள்’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், நடிகை மீனா. ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில் ரஜினிகாந்துடன் சிறுமியாக நடித்தார். ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் கதாநாயகி ஆனார். ‘எஜமான்’, ‘அவ்வை சண்முகி’, ‘முத்து’, ‘ராஜகுமாரன்’, ‘நாட்டாமை’ உள்பட ஏராளமான தமிழ் படங்களிலும், தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்து பிரபலம் ஆனார். தென்னிந்திய கதாநாயகிகளில் மிக முக்கியமான கதாநாயகியாகவும் மீனா திகழ்ந்தார்.
இவருக்கும் பெங்களூருவை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் வித்யாசாகருக்கும் கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்கள் கோட்டூர்புரம் பகுதியில் உள்ள ஸ்ரீநகர் காலனி கோவில் அவென்யூவில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தனர். இவர்களுக்கு நைனிகா என்ற ஒரே ஒரு மகள் இருக்கிறார். நைனிகாவும் சினிமாவில் நடித்து வருகிறார். விஜய்யுடன் ‘தெறி’, அரவிந்த்சாமியுடன் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.
மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு கொரோனா தொற்று ஏற்கனவே இருந்தது. அதற்காக சிகிச்சை பெற்று அவர் குணமடைந்தார். இவர் மட்டுமின்றி, இவரது தாய் ராஜ் மல்லிகா, மகள் நைனிகா ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவருக்கு மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டது. உடனடியாக சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் வித்யாசாகரின் நிலைமை மோசமடைந்ததால் உயர் சிகிச்சைகாக அமைந்தகரை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 9 மணியளவில் உயிரிழந்தார். 48 வயதான வித்யாசாகரின் மறைவு தமிழ் சினிமா பிரபலங்களையும் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதனிடையே வித்யாசாகருக்கு ஏற்கனவே நுரையீரல் பாதிப்பு இருந்ததாகவும் அவருக்கு புறாக்களின் எச்சம் பட்ட காற்றை சுவாசிப்பதால் நுரையீரலில் அலர்ஜி ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூருவில் வித்யாசாகர் வீட்டின் அருகே அதிகளவு புறாக்கள் வளர்க்கப்பட்டிருந்ததாகவும் அப்போதிலிருந்தே அவருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு, இரண்டு நுரையீரல்களையும் மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நேரத்தில்தான் கொரோனாவும் சேர்ந்து அவரது நிலைமை மிகவும் மோசமாக்கியதாகவும், நுரையீரல் தானம் கிடைப்பதற்குள் அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்த மருத்துவர்கள் முயற்சித்த நிலையில்தான் சிகிச்சை பலனின்றி வித்யாசாகர் மரணமடைந்ததாக கூறப்படுகிறது. வித்யாசாகரின் இறுதிச்சடங்கு கோட்டூர்புரத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று நடைபெறும் என தெரிகிறது.