சாய் பல்லவிக்கு போலீஸ் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய கோர்ட் மறுப்பு!

போலீஸ் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்யக்கோரி சாய் பல்லவி தொடர்ந்த மனுவை தெலங்கானா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மலையாளம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்து, முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சாய் பல்லவி. சமீபத்தில் அவர் அளித்திருந்த பேட்டி ஒன்றில், “காஷ்மீரில் இந்து பண்டிட்கள் கொல்லப்பட்டதும், வட இந்தியாவில் மாடு இறைச்சி விற்ற இஸ்லாமியரை ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கூறச்சொல்லி கொடுமைப்படுத்தியதும் ஒரேமாதிரியான மத வன்முறைதான்” என்று சொன்னார். இதற்கு பல இந்து அமைப்பினர் கடுமையான கண்டனம் தெரிவித்தனர். காஷ்மீர் தீவிரவாதிகளையும், பசு பாதுகாப்பு இயக்கத்தினரையும் ஒப்பிடுவதா என்று கூறி, சாய் பல்லவியை கடுமையான வார்த்தைகளால் வசைபாடினர்.

இதற்கு சாய் பல்லவி விளக்கம் அளித்தார் என்றாலும், அவர் மீது பஜ்ரங்தள் அமைப்பினர் ஐதராபாத் போலீசில் புகார் அளித்தனர். உடனே சாய் பல்லவிக்கு தெலங்கானா போலீஸ் ஒரு நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து போலீஸ் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்யக்கோரி சாய் பல்லவி தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், அவருடைய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. போலீசார் நோட்டீசுக்கு பதில் அளிக்க வேண்டியது சாய் பல்லவியின் கடமை என்று நீதிமன்றம் கூறியுள்ளது.