நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஞானவேல் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என காவல்துறையினருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரித்து நடித்த ஜெய் பீம் திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுபடுத்தியதாக நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஞானவேல் ஆகியோர் மீது வேளச்சேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இதனையடுத்து தங்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி இயக்குநர் ஞானவேல் மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு பதிவு செய்யப்படும் முன்பே சர்ச்சைக்குரிய காலண்டர் மாற்றப்பட்டதாக சூர்யா தரப்பின் சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. மேலும் புகார்தாரர் சார்பாக வழக்கை ரத்து செய்ய ஆட்சேபம் தெரிவித்து மனு தாக்கல் செய்யவுள்ளதாகவும் இரண்டு வழக்கையும் சேர்ந்து விசாரிக்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இந்த வழக்கு இன்று (ஜூலை 18) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சூர்யா மற்றும் இயக்குநர் ஞானவேல் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என காவல்துறையினருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 21 ஆம் தேதி ஒத்திவைத்தார்.