பிரபல இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை எம்பியாக இன்று பதவியேற்று கொண்டார். பதவிப் பிரமாணத்தை அவர் தமிழில் ஏற்றுக் கொண்டார்.
கலை, இலக்கியம், விளையாட்டு, சமூக சேவை உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் 12 பேரை நாடாளுமன்ற மாநிலங்களவை எம்பியாக நியமிக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு. அதன்படி, 40 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழ் திரையுலகின் ஜாம்பவானாக வலம் வந்து கொண்டிருக்கும் பிரபல இசையமைப்பாளரான இளையராஜா, இந்தியாவின் தங்க மங்கை என்று அழைக்கப்படும் பி.டி.உஷா உள்ளிட்டோர் மாநிலங்களவை நியமன எம்பிக்களாக அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் இளையராஜாவை தவிர, பிற நியமன எம்பிக்கள் கடந்த வாரம் திங்கள்கிழமை பதவியேற்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க அமெரிக்கா சென்றிருந்ததால், அவரால் அன்று பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க இயலவில்லை.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய அவர், இன்று நாடாளுமன்ற மாநிலங்களவை நியமன எம்பியாக பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு மாநிலங்களவை சபாநாயகர் லெங்கய்ய நாயுடு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தமிழ் மொழியில் பதவி பிரமாணம் எடுத்து சபையில் அனைவரின் கவனத்தையும் இளையராஜா ஈர்த்தார்.