சம்யுக்தா ஹெக்டே சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விபத்தில் சிக்கி காயம்!

கோமாளி, பப்பி, மன்மத லீலை உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ள பெங்களூருவைச் சேர்ந்த நடிகை சம்யுக்தா ஹெக்டே சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார்.

கிரிக் பார்ட்டி எனும் கன்னட படத்தின் மூலம் கடந்த 2016ம் ஆண்டு கன்னட திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் சம்யுக்தா ஹெக்டே. காலேஜ் குமார் படத்தைத் தொடர்ந்து ஜிவி பிரகாஷின் வாட்ச்மேன் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான சம்யுக்தா ஹெக்டேவுக்கு ஜெயம் ரவியின் கோமாளி திரைப்படம் மூலம் ஏகபட்ட ரசிகர்கள் கிடைத்தனர். ஜெயம் ரவியின் பள்ளி வயது காதலியாக நடித்திருப்பார் கோமாளி படத்தில். குறும்புத்தனம் அதிகம் கொண்ட சம்யுக்தா ஹெக்டே அடுத்ததாக பிக் பாஸ் வருண் நடிப்பில் வெளியான பப்பி படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார். தொடர்ந்து பிரபுதேவாவின் தேள் மற்றும் வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்த மன்மத லீலை உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், க்ரீம் எனும் கன்னட படத்தில் நடித்து வரும் சம்யுக்தா ஹெக்டே சூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி பலமாக அடிபட்ட நிலையில், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உள்ளார் சம்யுக்தா ஹெக்டே. அவருக்கு கால் மற்றும் கண்ணுக்கு அருகே பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

அறிமுக இயக்குநர் அபிஷேக் பசாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் க்ரீம் படத்தில் சண்டை இயக்குநர்கள் பிரபு மற்றும் கந்தீரவா ஸ்டன்ட் காட்சிகளை படமாக்கி வந்தனர். ரிஸ்க்கான ஸ்டன்ட் என்பதால், டூப் போட்டு எடுத்து விடலாம் என இயக்குநர் அறிவுறுத்தியிருக்கிறார். ஆனால், நானே ஸ்டன்ட் செய்கிறேன் என துணிச்சலோடு வந்த நிலையில், இப்படியொரு விபத்தில் சிக்கினார் சம்யுக்தா என இயக்குநர் அபிஷேக் தகவல் தெரிவித்துள்ளார்.

உடனடியாக குணமாகும் அளவுக்கு எல்லாம் அடிபடவில்லை. அடி சற்றே பலமாக பட்டுள்ளது என்றும், குறைந்த பட்சம் ஒரு 15 நாளாவது மருத்துவமனையில் ஓய்வில் இருக்க வேண்டும் நடிகை சம்யுக்தா ஹெக்டே என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.