முன்னாள் நடிகையும், ஆந்திர மாநில அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள மாண்புமிகு அமைச்சரான ரோஜா தற்போது புதிய சாதனை ஒன்றைப் படைத்து வொண்டர் புக் ஆஃப் ரெக்கார்ட் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.
1990களில் தமிழகம் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னட திரையுலகில் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் நடிகை ரோஜா, இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன நிலையில், பின்னர் சின்னத்திரை வெள்ளித்திரைகளில் அவ்வப்போது தலைகாட்டி வந்தார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு கட்சிக்காக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும் அவருக்கு நகரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு வெற்றியும் பெற்றார். ஜெகன்மோகன் ரெட்டியின் அமைச்சரவையில் நடிகை ரோஜாவுக்கு அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டபோது அவருக்கு அமைச்சர் பதவி வழங்கபட்டது.
இந்நிலையில் தற்போது புதிய சாதனை ஒன்றைப் படைத்து வொண்டர் புக் ஆஃப் ரெக்கார்ட் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார் மாண்புமிகு அமைச்சரான ரோஜா. ஆந்திர விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டு துறை அமைச்சராக இருக்கும் ரோஜாவை ஒரே நேரத்தில் 3 ஆயிரம் பேர் போட்டோ எடுத்துள்ளனர். இதற்கான ஏற்பாடு விஜயவாடாவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் செய்யப்பட்டிருந்த நிலையில் 3000 போட்டோகிராபர்கள் டிஜிட்டல் கேமராக்களோடு அந்த திருமண மண்டபத்தில் ஆஜராகினர். பின்னர் அங்கு வந்த அமைச்சர் ரோஜா திருமண மண்டபத்திற்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த மேடையில் தோன்றினார்.
இதை அடுத்து அவரை சுற்றிலும் மூன்றாயிரம் கேமராக்களோடு போட்டோகிராபர்கள் நிற்கவைக்கப்பட்டு ஒன் கிளிக் ஆன் சேம் டைம் என ஒரே நேரத்தில் 3000 போட்டோக்களை எடுத்து தள்ளினர். தொடர்ந்து போட்டோகிராபர்களுடன் உற்சாகமாக செல்பியும் எடுத்துக்கொண்டார். உலகில் இதுவரை ஒரு பெண் அமைச்சரை ஒரே நேரத்தில் 3000 போட்டோக்கள் எடுத்ததில்லை. இதை அடுத்து வொண்டர் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் கின்னஸ் சாதனை புத்தகம் மற்றும் இந்தியாஸ் யுனிக் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உள்ளிட்ட சாதனை புத்தகங்களில் நடிகை ரோஜாவின் பெயர் இடம் பெற்றுள்ளது. மேலும் அமைச்சர் ரோஜாவுக்கு கின்னஸ் சாதனைக்கான சான்றுகளும் வழங்கப்பட்டது.