நடிகை திரிஷா காங்கிரஸ் கட்சியில் இணைய திட்டம்?

தமிழ்த் திரையுலகில் நீண்ட காலமாக கதாநாயகியாகவே பணியாற்றி வரும் நடிகை திரிஷா தீவிர அரசியலில் ஈடுபட இருப்பதாகவும் தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியில் அவர் இணைய பேச்சுவார்த்தை நடப்பதாகவும் சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தமிழ் திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக குறிப்பாக கதாநாயகியாக மட்டுமே நடிப்பேன் என உறுதியாக இருப்பவர் திரிஷா என்ற திரிஷா கிருஷ்ணன். கேரள மாநிலம் பாலக்காட்டை பூர்வீகமாகக் கொண்ட அவர் சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த பின்பு 1999 ஆம் ஆண்டில் மிஸ் சேலம் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். பின்னர் அதே ஆண்டில் மிஸ் சென்னை பட்டத்தை பிடித்த அவர் மாடலிங் துறையில் பிரபலமான பிறகு 2001 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியிலும் கலந்து கொண்டார். அதன் பிறகு திரைத்துறையில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. மாடலிங் துறையில் இருந்த போது ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமான அவர் பின்னர் லேசா லேசா திரைப்படத்தின் மூலம் நாயகியாக தனது திரைப்பயணத்தை தொடர்ந்தார். தொடர்ந்து சாமி, கில்லி என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்த அவர் தமிழ் துறையில் கொடிகட்டி பறந்த பல்வேறு நாயகர்களுடன் நாயகியாக நடித்துள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித், சிம்பு, தனுஷ் என முன்னணி நாயகர்களுடன் இவர் நடித்த திரைப்படங்கள் அதில் புதிரி ஹிட்டான நிலையில் தற்போது வரை நாயகியாக தொடர்ந்து வருகிறார்.

40 வயதை நெருங்கினாலும் தற்போதும் நாயகியாகவே தொடரும் திரிஷா தற்போது இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் மற்றும் சதுரங்க வேட்டை 2 ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் தற்போது நடித்து வரும் அவர் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. தெலுங்கிலும் தமிழிலும் நடித்த ராணாவுடன் காதலில் இருந்ததாகவும், பின்னர் மற்றொருவருடன் நிச்சயதார்த்தம் வரை சென்ற நிலையில் கடைசி நேரத்தில் திருமணம் நின்றது.

தற்போது சினிமாவில் தீவிரம் காட்டி வரும் நடிகை திரிஷா அரசியலில் குதிக்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தில் தீவிர அரசியல்வாதியாக நடித்திருந்த திரிஷா தற்போது உண்மையில் தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்திருக்கிறது. குறிப்பாக தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியில் அவர் இணைய இருப்பதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் த்ரிஷாவை தங்கள் கட்சியில் இணைய வேண்டும் என தொடர்பு கொண்டு பேசி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை திரிஷா தரப்பில் கட்சியில் சேர்வது குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. அதே நேரத்தில் மறுப்பையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தளபதி 67 படத்தில் திரிஷா நடிக்கவிருப்பதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் சமீபத்தில் தளபதி 67 படத்தில் பாடல்களோ, காதல் காட்சிகளோ இல்லாமல் முழுக்க முழுக்க அதிரடி சண்டைக்காட்சிகள் நிறைந்த படமாக இருக்கும் என தகவல் கிடைத்துள்ளது. பொன்னியின் செல்வனை நடிகை திரிஷா மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார். காரணம் பொன்னியின் செல்வனில் அவர் நடித்துள்ள குந்தவை கதாப்பாத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அந்நாவலை படித்தவர்கள் அனைவரும் அறிவர். பொன்னியின் செல்வன் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இந்தப் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியான நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற செப்டம்பர் 5 ஆம் தேதி நடைபெறவிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் திரிஷா அரசியலுக்கு வரவிருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆனால் இதனை திரிஷாவின் அம்மா மறுத்துள்ளார்.