நடிகர் ஜூனியர் என்டிஆர் திடீரென அமித் ஷாவுடன் சந்திப்பு!

நடிகர் ஜூனியர் என்டிஆர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசியது தெலங்கானா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானாவில் முனுகோட் தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா செய்த நிலையில், அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் பரப்புரைக்காக சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஹைதராபாத்தில் ஜூனியர் என்டிஆர் சந்தித்து பேசியுள்ளார். பின்னர் இருவரும் இணைந்து இரவு உணவு அருந்தினர். சுமார் 20 நிமிடம் நீடித்த இந்த சந்திப்பில் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் மத்திய அமைச்சர் அமித் ஷா, நடிகர் ஜூனியர் என்டிஆரை தெலுங்கு சினிமாவின் ரத்தினம் என்று பாராட்டியுள்ளார்.

முன்னதாக ராமோஜி பிலிம் சிட்டிக்கு சென்ற அமித்ஷா, அதன் நிறுவனர் ராமோஜி ராவை சந்தித்தார். இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற அமித் ஷா, பல்வேறு முக்கிய பிரமுகர்களை சந்தித்துள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது. ஏற்கனவே பாஜக செயற்குழு கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெற்றபோது, ஆபரேசன் தென் இந்தியா என்ற புதிய திட்டத்தை அமித் ஷா முன்வைத்தார். இதனால் தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியமைக்க கட்சியினர் பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனைத்தொடர்ந்து மாநிலங்களவை நியமன எம்பி-க்கள் பதவிகளில் இந்த 4 மாநிலங்களைச் சேர்ந்த திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டது. அதேபோல் தெலங்கானாவில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், அங்கு பாஜகவின் செயல்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து தொகுதிகளிலும் பணியாற்ற தனித்தனிக் குழு அமைக்கப்பட்டு தீவிரமாக பாஜக செயலாற்றி வருகிறது.

இந்த நிலையில் மத்திய அமைச்சர் அமித் ஷா நடிகர் ஜூனியர் என்டிஆரை சந்தித்து பேசியுள்ளது தெலங்கானா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நடிகர் ஜூனியர் என்டிஆர் விரைவில் பாஜகவில் இணைய வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தெலுங்கு சினிமாவில் நடிகர் பவன் கல்யாண் தனியாக கட்சி தொடங்கி பணியாற்றினாலும், பாஜகவுடன் கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகிறார். இதனால் அவருக்கு தெலுங்கு சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர் ஜூனியர் என்டிஆரை பாஜக முக்கியத் தலைவர் சந்தித்துள்ளார். இதனால் விரைவில் நடிகர் ஜூனியர் என்டிஆர் பாஜகவில் இணையலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.