சென்னையில் ஒரு தலைக்காதலால் கல்லூரி மாணவியை ரயிலுக்குள் தள்ளி படுகொலை செய்த வழக்கில் கைதான நபருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என பாஜகவை சேர்ந்த நடிகையான காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.
சென்னை ஆலந்தூர் ராஜா தெரு போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தவர் மாணிக்கம் (வயது 47). இவரது மனைவி ராமலட்சுமி (43). இந்த தம்பதியின் மகள் சத்தியப்பிரியா (20). இதில் ராமலட்சுமி ஆதம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு ஏட்டாக பணியாற்றி வருகிறார். மாணிக்கம் கால் டாக்ஸி ஓட்டி வந்த நிலையில் சத்தியப்பிரியா சென்னை தியாகராயநகரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.
மாணவி சத்தியப்பிரியா தினமும் ரயிலில் கல்லூரி சென்று வருவதை வாடிக்கையாக வைத்திருந்தார். நேற்று சத்தியப்பிரியா பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு சென்றார். அப்போது அவரிடம் தகராறில் ஈடுபட்ட மர்மநபர் வேகமாக வந்த ரயிலுக்குள் தள்ளி விட்டார். இதில் ரயிலின் அடியில் சிக்கிய சத்தியப்பிரியா உடல் நசுங்கி இறந்தார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். மாணவிகளை கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேலும் இன்று நீதிமன்றத்துக்கு கொலையாளி சதீசை போலீசார் அழைத்து வந்தபோதும் கூட வழக்கறிஞர்கள், பொதுமக்கள் அவரை தாக்க முயன்றனர்.
இந்நிலையில் காயத்ரி ரகுராம் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛தாய் வலியுடனும், இழப்புடனும் தனியாக இருக்கிறார். கண்ணீருக்கு யாராலும் பதில் சொல்ல முடியாது. நீதி வேண்டும். அது அம்மாவுக்கு போதாது. பெண்களை வேட்டையாடும் பயங்கரவாதத்தை விட்டுவிடக்கூடாது. மகள் மற்றும் தந்தையின் உயிரை பறித்த கொலைகாரன் தண்டிக்கப்பட வேண்டும். மரண தண்டனை வழங்க வேண்டும். ஜாமீன் வழங்கக்கூடாது. இது எனது வேண்டுகோள்” என கூறியுள்ளார்.
இந்நிலையில் நடிகை கஸ்தூரியும் தன்னுடைய ஆதங்கத்தை கண்ணீராய் கொட்டி உள்ளார். இதுகுறித்து ஒரு டுவீட் ஒன்றினையும் அவர் பதிவிட்டுள்ளார். அதில், “விருப்பமில்லாத பெண்ணை தொடர்ந்து டார்ச்சர் பண்ணுறது விடாமுயற்சி, வீரம் புண்ணாக்குன்னு நம்புறவன மட்டுமில்ல, நம்ப வச்சவனையும் சேர்த்து தண்டிக்கணும். அது எந்த தலைவனா இருந்தாலும் சரி, சினிமாவாக இருந்தாலும் சரி.. வயிறெரியுது” என்று ஆவேசத்துடன் பதிவிட்டுள்ளார்.