சத்யாவை கொன்று சத்யாவின் அப்பாவின் தற்கொலைக்கு காரணமான சதிஷை, உடனே விசாரித்து, ரயில்ல தள்ளி விட்டு தண்டிக்கும் படி, பொது மக்களில் ஒருவனாக, கனம் நீதிபதி அவர்களை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் என்று இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி கோரிக்கை விடுத்துள்ளார்
பரங்கிமலை ரயில் நிலையத்தில் சத்யா என்ற கல்லூரி மாணவி சதீஷ் என்ற இளைஞரால் ரயிலில் தள்ளி விட்டு கொலை செய்யப்பட்டார். சத்யா தனியார் கல்லூரியில் பி காம் படித்து வந்த நிலையில், அவரை சதீஷ் ஒரு தலையாக காதலித்து உள்ளார். இவர்கள் இருவரும் போலீஸ் குடியிருப்பில்தான் வசித்து வந்துள்ளனர். சத்யாவின் அப்பா மாணிக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தார். சதீஷின் அப்பா தயாளன் முன்னாள் எஸ்.ஐ. போலீஸ் குடியிருப்பில் சத்யாவை பார்த்த சதீஷ் பல வருடங்களாக அவரை காதலித்து வந்துள்ளார். சத்யா செல்லும் வழியில் எல்லாம் சதீஷ் சென்று, அவரை அடிக்கடி தொந்தரவு செய்துள்ளார். குடியிருப்பில் அடிக்கடி பார்த்து காதலை சொல்லி இருக்கிறார். கல்லூரிக்கு தனியாக செல்லும் போது, திரும்பி வரும் போதெல்லாம் காதலை சொல்லி இருக்கிறார். இந்த ஒருதலைக் காதல் காரணமாக மது உள்ளிட்ட போதை பொருள் பழக்கத்திற்கு சதீஷ் ஆளாகி இருக்கிறார். ரயிலில் தள்ளி விட்டு கொலை சதீஷ் பெரிதாக படிப்பு மீது ஆர்வம் காட்டாமல், ரவுடித்தனமாக சுற்றிக்கொண்டு இருந்துள்ளார். இந்த நிலையில்தான் சத்யா காதலை ஏற்றுக்கொள்ளாத கோபத்தில் நேற்று சதீஷ் அவரை கொலை செய்தார். பரங்கிமலை ரயில்நிலையத்தில் ரயிலுக்காக சத்யா காத்திருந்த போது, சதீஷ் அவரை ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்தார். இதில் உடல் இரண்டாகி சத்யா சம்பவ இடத்திலேயே பலியானார். சத்யாவின் தந்தை மரணம் சதீஷ் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில் போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். தொடர் தேடுதலுக்கு போன் நேற்று இரவு சதீஷ் போலீசார் மூலம் கைது செய்யப்பட்டார்.
இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் சத்யாவின் தந்தை மாணிக்கம் திடீரென இன்று அதிகாலை மரணம் அடைந்தார். அவருக்கு ஏற்கனவே ஒருமுறை மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் இன்று காலை அவர் அதிர்ச்சியில் மாரடைப்பு காரணமாக பலியானதாக கூறப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் மாணிக்கத்திற்கு மாரடைப்பு ஏற்படவில்லை. அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் என்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது இரண்டு பேரின் உடலும் ஒன்றாக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது. ராஜீவ் காந்தி மருத்துவமனையின் பிணவறையில் இரண்டு பேரின் உடலும் அருகருகே வைக்கப்பட்டு இருந்தது. உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறினர். வீட்டில் குவிந்த உறவினர்கள் பிரேத பரிசோதனைக்குப் பிறகு இருவரின் உடலும் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது சூழ்ந்திருந்த உறவினர்களும், அக்கம்பக்கத்தினரும் கண்ணீர் விட்டு அழுதனர். ஒரே நாளில் கணவரையும் மகளையும் பறிகொடுத்த வேதனையில் அலறி துடித்தார் சத்யாவின் அம்மா. அது காண்பவர்கள் பலருக்கும் கண்ணீரை வரவழைத்தது.
இந்த கொலை சம்பவமும் தற்கொலை சம்பவமும் பலரையும் பதை பதைக்க வைத்துள்ளது. இந்த நிலையில் இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘குற்றவாளிக்கு உடனே தண்டனை தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். சத்யாவை கொன்று சத்யாவின் அப்பாவின் தற்கொலைக்கு காரணமான சதிஷை, பொறுமையாக விசாரித்து 10 வருஷத்துக்கு அப்புறம் தூக்குல போடாமல், தயவு செய்து, உடனே விசாரித்து, ரயில்ல தள்ளி விட்டு தண்டிக்கும் படி, சத்யாவின் சார்பாக பொது மக்களில் ஒருவனாக, கனம் நீதிபதி அவர்களை கெஞ்சி கேட்டு கொள்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார் விஜய் ஆண்டனி.