ரஜினி போன்ற பிரபலங்கள் பொறுப்பாக நடந்துகொள்ள வேண்டும் என்று நீதிபதி அருணா ஜெகதீசன்
விசாரணை ஆணையம் கூறியுள்ளது.
தூத்துக்குடியில் கடந்த 2018ம் ஆண்டு மே 22ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள் தன்னெழுச்சியாக நடத்திய போராட்டத்தில், கலவரம் வெடித்ததாக கூறி போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், 13 பேர் பலியானார்கள். இது தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தி வந்தது.
இதற்கிடையே துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதற்காக ரஜினி தூத்துக்குடி சென்றார். அங்கு அவர்களுக்கு ஆறுதல் கூறிய பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது ரஜினிகாந்த், ‘ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதற்கு காரணம் சமூக விரோதிகள் தான்’ என்று பகீர் குற்றச்சாட்டு முன்வைத்து இருந்தார்.
இதன் பிறகு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, ‘ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் புகுந்த சமூக விரோதிகள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவல் துறையினர் மீது சமூக விரோதிகள் தாக்குதல் நடத்தியதால் தான் வன்முறை வெடித்தது. தமிழ்நாட்டில் மக்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டால் தமிழ்நாடு சுடுகாடாக தான் மாறும்’ என சற்று காட்டமாகவே பேசி இருந்தார்.
இதையடுத்து இந்த கருத்து குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு, நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் ரஜினிக்கு சம்மன் அனுப்பியது. இதற்கு எழுத்து மூலம் பதில் அளித்த ரஜினி, ‘ஸ்டெர்லைட் ஆலை வன்முறை குறித்து எனக்கு எதுவும் தெரியாது. வன்முறையை ஏவிவிட்டது சமூக விரோதிகளாக இருக்கலாம் என்று தான் நினைத்தேன். அப்படி எந்த சமூக விரோதியையும் எனக்கு தெரியாது’ என கூறி இருந்தார்.
இந்த நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணைய விசாரணை அறிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில், ‘சமூக விரோதிகளால் தான் கலவரம் உண்டானது என்று கூறியதற்கு தன்னிடம் எந்த ஆதாரமும் இல்லை என ரஜினி கூறினார். ரஜினி போன்ற பிரபலம் ஒரு கருத்தை தெரிவிக்கும்போது அவர் கூறும் தகவலின் ஆதாரத்தை உறுதி செய்து இருக்க வேண்டும். பிரபலங்கள் பொறுப்பாக நடந்துகொள்ள வேண்டும்’ என நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அறிக்கையில் கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.