இயக்குநர் பேரரசுக்கு இந்து மத பாதுகாவலர் விருது வழங்குவதாக நித்தியானந்தா அறிவிப்பு!

பிரபல தமிழ் சினிமா இயக்குநர் பேரரசுக்கு ‘இந்து மத பாதுகாவலர்’ விருது வழங்குவதாக நித்தியானந்தா அறிவித்துள்ளார்.

கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகே உள்ள பிடதியில் ஆசிரமம் நடத்தி வந்தவர் நித்யானந்தா. தமிழ்நாட்டை சேர்ந்த நித்தியானந்தா, ‘கதவை திற காற்று வரட்டும்’ என்கிற ஆன்மிக கட்டுரை மூலம் தமிழக முழுவதும் பிரபலம் ஆனார். இதைத் தொடர்ந்து தமிழ் சினிமா நடிகை ரஞ்சிதாவும், நித்தியானந்தாவும் படுக்கை அறையில் பலான வேலையில் ஈடுபட்டு இருப்பதை போன்ற வீடியோ வெளியானதை அடுத்து உலகம் முழுவதும் பேமஸ் ஆனார். இதற்கிடையே பெண் சீடர்களுக்கு பாலியல் தொந்தரவு, ஆண் சீடர்களுக்கு பாலியல் தொந்தரவு, இளம்பெண்களை கட்டாயப்படுத்தி ஆசிரமத்துக்குள் அடைத்து வைத்து சித்திரவதை என பல்வேறு குற்றச்சாட்டுகள் நித்தியானந்தா மீது கூறப்பட்டதால் சட்ட சிக்கலில் மாட்டினார். இதன் விளைவாக, நித்தியானந்தா தலைமறைவானார்.

இந்தியாவை விட்டே நித்யானந்தா வெளியேறியதாக கூறப்படும் நிலையில், அவர் எங்கு இருக்கிறார்? என்பதை புலனாய்வு நிறுவனங்களால் கூட கண்டுபிடிக்க முடியாத சூழல் நிலவுகிறது. ஆனால் நித்யானந்தாவோ, ‘கைலாசா’ என்கிற தனித்தீவு நாட்டை உருவாக்கி விட்டதாகவும், இந்து மதத்தைச் சேர்ந்த எவரும், கைலாசா நாட்டின் குடிமகன் ஆகலாம் என்றும் கூறி இணையத்தையே தெறிக்க விட்டு வருகிறார்.
அத்துடன் இல்லாமல் தனது பக்தர்களுக்கு அடிக்கடி சமூக வலைதளங்கள் மூலம் நேரலையாக தோன்றி நித்தியானந்தா ஆன்மிக உரையாற்றி வருகிறார். இது ஒருபுறம் ஆச்சரியமாக இருந்தாலும், சர்வதேச போலீஸ் உதவியுடன் கூட அவரை பிடிக்க முடியவில்லை என்று போலீசாரே கூறுவது வேடிக்கையாகவும் உள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இந்த நிலையில் இயக்குனர் பேரரசுக்கு விருது வழங்கப்படுவதாக நித்தியானந்தா அறிவித்து உள்ளார். இயக்குநர் பேரரசின் ஆன்மிக பணிக்காக, கைலாசவில் இருந்து ‘கைலாச தர்ம ரட்சகா’ விருது வழங்கப்படும் என நித்யானந்தா தெரிவித்துள்ளார். மேலும் இயக்குனர் பேரரசுக்கு ஆதரவாக என்றும் நானும், கைலாசமும் இருப்போம். அவரது ஆன்மிக பணிகள் தொடர வாழ்த்துக்கள் என்றும் நித்தியானந்தா அறிவித்து உள்ளார்.