மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரை கவுரவிக்கும் கர்நாடக அரசின் விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கன்னட சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்த நடிகர் புனீத் ராஜ்குமார் கடந்த ஆண்டு அக்டோபர் 29 ஆம் தேதி திடீரென மாரடைப்பால் காலமானார். வீட்டில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போதே சரிந்து விழுந்து உயிரிழந்தார். சினிமாவில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக வலம் வந்த புனீத் ராஜ்குமாரின் மறைவு கன்னட சினிமா மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
புனித் ராஜ்குமார் காலமாகி நாளையுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இந்நிலையில் புனீத் ராஜ்குமாரை கவுரவிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி மறைந்த புனீத் ராஜ்குமாருக்கு வரும் நவம்பர் ஒன்றாம் தேதி கர்நாடக மாநிலத்தின் உயரிய விருதான கர்நாடக ரத்னா விருது வழங்கப்படவுள்ளது. இந்த விருது வழங்கும் விழா கர்நாடக சட்டசபையான விதான சவுதாவில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பங்கேற்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் ஆகியோருக்கு விதான சவுதாவில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனை அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.