நடித்த சரத்குமார், பிரேம்ஜி ஆகியோரை கைது செய்ய போலீசில் புகார்!

ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளம்பரத்தில் நடித்த சரத்குமார், பிரேம்ஜி ஆகியோரை கைது செய்ய வேண்டும் என போலீசில் ஒரு பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருபவர் தமிழ் வேந்தன். இவர் போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:-

ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. 18 வயதுக்கு கீழ் உள்ள சிறார்களும் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் மூழ்கி கிடக்கிறார்கள். பலர் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களாக மாறிவிட்டனர். இத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் ரம்மி சூதாட்டத்தை திரைத்துறை பிரபலங்கள் வாயிலாக விளம்பரம் செய்வது வெட்கக் கேடானது.

ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் அதிக பணம் சம்பாதிக்கலாம் என நடிகர்கள் சொல்லும் போது அதை பொதுமக்கள் உண்மை என நம்பி விடுகிறார்கள். அந்த நடிகர்களின் ரசிகர்கள், சூதாட்டத்தில் மூழ்கி வாழ்வை சீரழித்துக் கொள்கிறார்கள். விளம்பரங்களில் நடிப்பது எங்கள் தனிப்பட்ட உரிமை என நடிகர்கள் தெரிவிப்பது ஏற்புடையது அல்ல. அவர்களுக்கும் சமூக பொறுப்புணர்வு உள்ளது. ஆன்லைன் ரம்மி சூதாட்டம் குறித்த விளம்பரத்தில் நடித்துள்ள சரத்குமார், முன்னாள் எம்எல்ஏ ஆவார். அவர் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும் கூட. இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்களும் தொண்டர்களும் இருக்கிறார்கள். அப்படியிருக்கும் போது இவர் ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடித்தால் அது அவருடைய பின்தொடர்பாளர்களுக்கு தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும்.

அது போல் பிரேம்ஜியின் தந்தை கங்கை அமரனும் சமூகபொறுப்பு மிக்கவர். பாஜகவில் உள்ளார். அப்படிப்பட்டவரின் மகன் ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளம்பரத்தில் நடித்திருப்பது மக்களிடம் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர்கள் சரத்குமார், பிரேம்ஜி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அவர்கள் நடித்துள்ள ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளம்பரத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.