குண்டும் குழியுமான சாலைகளை அமைத்து விபத்துகளை ஏற்படுத்துபவர்கள் தண்டனைக்குள்ளாவதில்லை. இனியாவது இதற்கொரு தீர்வு காண வேண்டும் என்று இயக்குநர் தங்கர் பச்சான் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மிக அதிகமான சாலை விபத்துகள் மிக அதிகமான சாலை விபத்துகள் பதிவான மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாட்டில் 2021 ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி 4.22 லட்சம் பேர் சாலை விபத்துகளில் 1.73 லட்சம் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த விபத்துகளில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 24,711 பேர் இறந்துள்ளனர். அடுத்தபடியாக தமிழகத்தில் 16,685 பேர் இறந்துள்ளனர். அது போல் கடந்த 2020 ஆம் ஆண்டு 3,68,828 ஆக இருந்த சாலை விபத்துகள் 2021 இல் 4,22,659 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்துகளில் 4,03,116 விபத்துகள் சாலையிலும், 17,933 ரயில் விபத்துகளாகவும் 1550 விபத்துகள் ரயில் தண்டவாளம் விபத்துகள் 1807 ஆக உள்ளன. 2020 ஐ விட 2021 ஆம் ஆண்டு மிக அதிகமாக சாலை விபத்துகள் பதிவான மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து இயக்குநர் தங்கர் பச்சான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மக்கள் பணத்தில் அமைக்கப்படும் தரமற்ற சாலைகளும் அரசு கட்டடங்களும் பாலங்களுமே ஊழலும் கையூட்டும் ஆண்டாண்டு காலமாக கொடி கட்டி பறப்பதற்கு சான்றாக விளங்குகின்றன. உலகில் எங்கும் இல்லாதபடி ஆண்டுக்கு ஆண்டு ஒட்டு போட்டு சாலைகள் புதுப்பிக்கப்படுகின்றன. 2000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கல்லணை இன்றும் பயன்பாட்டில் இருக்கும் போது 50 ஆண்டுகள் கூட நிற்காத பாலங்களும், 20 ஆண்டுகள் கூட நிற்காத கட்டடங்களும் உருவாகிக் கொண்டிருப்பதை நம்மால் தடுக்க முடியவில்லை.
சட்ட நுணுக்கங்களை கரைத்துக் குடித்த வழக்கறிஞர்களும் நீதிமான்களும் இத்தகைய சாலைகளில்தான் நாள்தோறும் பயணிக்கிறார்கள். இத்தகைய கட்டடங்களில் அமர்ந்து கொண்டு தான் வழக்கை அலசி ஆராய்ந்து குற்றவாளிகளை தண்டிக்கிறார்கள். குண்டும் குழியுமான சாலைகளால்தான் பெரும்பாலான விபத்துகள் ஏற்படுகின்றன. அப்படிப்பட்ட சாலைகளை அமைத்து விபத்துகளை ஏற்படுத்துபவர்கள் தண்டனைக்குள்ளாவதில்லை. எவை எவற்றையோ ஆய்வு செய்து யார் யாரெல்லாமோ தண்டிக்கப்படும் போது இத்தகைய குற்றவாளிகள் மட்டும் ஏனோ தண்டிக்கப்படுவதில்லை. இனியாவது இதற்கொரு தீர்வு காண வேண்டும். வழி பிறந்தால் உங்களை வணங்குவோம்! போற்றுவோம். இவ்வாறு தங்கர் பச்சான் தெரிவித்துள்ளார்.