நான் ஸ்டார் என்பதையும் தாண்டி, ஒரு நடிகையாகவே என்னை பார்க்கிறேன் என்று நடிகை தமன்னா கூறினார்.
தமன்னா நடித்துள்ள குர்துண்ட சீதாகாலம் தெலுங்கு படம் திரைக்கு வந்துள்ளது. இந்த படம் குறித்து ஐதராபாத் வந்த தமன்னா நிருபர்களிடம் கூறியதாவது:-
குர்துண்ட சீதாகாலம் படத்தின் கதைதான் இதில் நடிக்க என்னை தூண்டியது. நல்ல கதையுள்ள படத்தில் எந்த மாதிரியான கேரக்டரும் ஏற்க நான் தயாராக இருக்கிறேன். இந்த படத்துக்காக எனக்கு கிடைத்துள்ள வரவேற்பு மகிழ்ச்சி தருகிறது. தியேட்டரை விட ஓடிடிக்கு நான் முக்கியத்துவம் தருவதாக சொல்கிறார்கள். அடுத்தடுத்து எனது படங்கள் ஓடிடியில் வெளியானது. வெப்சீரிஸ்களிலும் நடித்தேன். அடுத்த ஆண்டில் மட்டும் எனது 3 ஓடிடி ரிலீஸ் இருக்கிறது. தியேட்டர் எனக்கு அம்மா வீடு மாதிரி. ஓடிடி புகுந்த வீடு மாதிரி. இரண்டுமே எனக்கு தேவைதான். ஓடிடி மூலம் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் எளிதில் சென்றடைய முடிகிறது.
அதனால்தான் ஓடிடியின் வளர்ச்சியும் யாரும் கணிக்க முடியாத வகையில் அபாரமாக உள்ளது.
நான் ஸ்டார் என்பதையும் தாண்டி, ஒரு நடிகையாகவே என்னை பார்க்கிறேன். அப்படித்தான் எனது கேரியரும் கடந்த பல ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது. ஸ்டார் என்ற கீரிடத்தை தலையில் சூட்டிக்கொள்ள எனக்கு கொஞ்சமும் விருப்பமில்லை. ஆனால் நல்ல நடிகை என்ற கிரீடம் எப்போதுமே எனக்கு தேவையாக உள்ளது. எனது திருமணத்தை பற்றி மீடியாதான் அடிக்கடி ஏதாவது எழுதுகிறார்கள். ஒருமுறை டாக்டர் தான் மாப்பிள்ளை என்கிறார்கள். ஒருமுறை தொழிலதிபருடன் திருமணம் என்கிறார்கள். மீடியாவுக்கு தெரிந்தது கூட எனக்கு தெரியவில்லை. இவ்வாறு தமன்னா கூறினார்.