காவி உடை அணிந்த திருவள்ளுவர் போன்று ரஜினியை சித்தரித்து மதுரையில் போஸ்டர்!

நடிகர் ரஜினியை காவி உடை அணிந்த திருவள்ளுவர் போன்று சித்தரித்து மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

அரசியலுக்கு வருவாரா? வர மாட்டாரா? என்ற பேச்சுகளுக்கு மத்தியில், கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது ரசிகர்களை ராகவேந்திரா மண்டபத்தில் சந்தித்து பேசிய ரஜினிகாந்த், அப்போதைய ஆளுங்கட்சியான அதிமுக அரசை கடுமையாக விமர்சித்து பேசினார். “தமிழகத்தில் இன்றைய அரசியலில் நிர்வாகம் சீர்கெட்டிருக்கிறது. சிஸ்டம் சரியில்லை. இது மொத்தத்தையும் சரிசெய்ய வேண்டும். அதற்கான நேரம் வரும். போர் வரும் போது களம் காணுவோம்.” என்று தனது அரசியல் வருகையை உறுதி செய்தார். ஆனால், அந்த அறிவிப்பு வெற்று அறிவிப்பாகவே இருந்தது. ‘மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்; இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல’ என்ற பஞ்ச் டையலாக்குகள் மட்டுமே அவ்வப்போது வெளி வந்தன. இதையடுத்து, மூன்றாண்டுகள் கழித்து தன்னுடைய உடல்நிலை காரணமாக அரசியலில் இருந்து விலகும் முடிவை எடுத்து அறிவித்தார் ரஜினிகாந்த்.

முன்னதாக, நடிகர் ரஜினியின் கருத்துகள் பாஜகவுக்கு ஆதரவாகவே இருப்பதால் அவர் பாஜகவில் சேர வாய்ப்புள்ளது எனவும் கூறப்பட்டது. அதற்கு வலு சேர்க்கும் வகையில் பாஜக தலைவர்களின் கருத்துகளும் ரஜினிக்கு ஆதரவான நிலைப்பட்டையே எடுத்தன. ஆனால், ராஜ்கமல் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில் மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தரின் சிலை திறப்பு விழாவில் 2019ஆம் ஆண்டில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, “என் மேல் பாஜக சாயம் பூசப்பார்க்கிறார்கள். திருவள்ளுவர் மேல் காவி சாயம் பூசுவது போல் என்மேல் பூசவும் முயற்சி செய்கிறார்கள். திருவள்ளுவரும் சிக்கமாட்டார், நானும் சிக்கமாட்டேன்.” என்றார்.

பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே, பழந்தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள், வரலாற்றுச்சிறப்பு மிக்கவர்களுக்குக் காவி சாயம் பூசும் வழக்கம் தொடர்ந்து வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. அந்த வகையில், திருவள்ளுவரின் நெற்றியில் திருநீறு பூசி, கழுத்தில் ருத்திராஷ்டிர மாலை அணிந்து அவருக்கு காவி உடையை அணிவித்த பாஜகவினருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். அந்த சமயத்தில், திருவள்ளுவரும் சிக்கமாட்டார், நானும் சிக்கமாட்டேன் என இந்துத்துவ கொள்கைகள் மற்றும் பாஜக மீது கரிசன பார்வை கொண்டவராக சித்தரிக்கப்பட்டுள்ள ரஜினி, பாஜகவுக்கும் தனக்குமான இடைவெளி குறித்து முதன்முறையாக வெளிப்படையாக தெரிவித்த அந்த கருத்து தமிழக அரசியல் களத்தில் கவனம் ஈர்த்தது.

இந்த நிலையில், நடிகர் ரஜினியை காவி உடை அணிந்த திருவள்ளுவர் போன்று சித்தரித்து மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் தனது பிறந்தநாளை வருகிற 12ஆம் தேதி கொண்டாடவுள்ளார். அதனை முன்னிட்டு, அவரது ரசிகர்கள் இப்போதே கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், மதுரை ரஜினி ரசிகர்கள், ‘வாழும் வள்ளுவரே’ என்று ரஜினியை குறிப்பிட்டு, காவி உடையிலும், தாடி, கொண்டையுடனும், திருவள்ளுவரின் புகைப்படத்தை மாற்றி ரஜினி போன்று அச்சிட்டு போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில், ‘அவரினுது, இவரினிது என்பர் ரஜினியின் புகழும் குணமும் அறியாதோர்’ புதிய குறள் 12.2022 எனவும், ‘வாழும் வள்ளுவரே’ உம்மை போற்றி வணங்குகிறோம்; டிசம்பர் 12 ரஜினி தினம் என்ற வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.

திருவள்ளுவர் என்றால் அவரது சாந்தமான கண்கள், தலையில் கொண்டையுடன் கூடிய நீளத் தலைமுடி, முகத்தில் நீளமான தாடி, கையில் எழுத்தாணி, ஓலைச்சுவடு, ஆபரணங்கள் இல்லாத உடலில் போர்த்தப்பட்டுள்ள வெள்ளை உடை உள்ளிட்டவை சட்டென நமது நினைவுக்கு வரும். ஆனால், அவருக்கே காவி உடை அணிவித்து, நெற்றியில் திருநீறு பூசி, கழுத்தில் ருத்திராஷ்டிர மாலை அணிவித்து போஸ்டர் வெளியிட்டனர் பாஜகவினர். தற்போது ரஜினி ரசிகர்கள் ஒருபடி மேலே போய், வள்ளுவரை இந்துவாக ஒப்பிடும் வகையிலும், நடிகர் ரஜினியை காவி உடை அணிந்த திருவள்ளுவர் போன்றும் சித்தரித்து போஸ்டர்கள் ஒட்டியுள்ளது பேசு பொருளாகி உள்ளது.