இன்று மாலை ஆறு மணிக்கு முத்துவேல் பாண்டியன் வருகின்றார்: ஜெயிலர் படக்குழு

இன்று மாலை ஆறு மணிக்கு முத்துவேல் பாண்டியன் வருகின்றார் என்று ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு ஜெயிலர் படக்குழு வெளியிட்டுள்ள அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவை கடந்த நாற்பது ஆண்டுகளாக சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினி. ஆரம்பகாலகட்டத்தில் வில்லனாக நடித்து பின்பு குணச்சித்திர காதாபாத்திரங்களில் தோன்றிய ரஜினி பின்னாளில் சூப்பர்ஸ்டாராக தன் கடின உழைப்பால் முன்னேறினார். தற்போது ரசிகர்களின் மனதில் நிரந்தர இடத்தை பிடித்துள்ள ரஜினி இன்றளவும் தன் ரசிகர்களுக்காக தொடர்ந்து படங்களில் நடித்து வருகின்றார்

சூப்பர்ஸ்டார் என்ற நிரந்தர அந்தஸ்தை பெற்றுள்ள ரஜினி என்னதான் பல வெற்றிகளை கொடுத்தாலும் சமீபகாலமாக எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்காமல் தவித்து வருகின்றார். எந்திரன் படத்திற்கு பிறகு அவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றிபெறவில்லை. குறிப்பாக கடைசியாக வெளியான சில படங்கள் படுதோல்வி அடைந்துள்ளது. இதன் காரணமாக ரஜினியின் மீது சில கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. எனவே தற்போது நடித்து வரும் படங்களை மெகாஹிட் படங்களாக கொடுத்து தான் யார் என நிரூபிக்கும் தருணத்தில் இருக்கின்றார் ரஜினி. இதற்கு முன்பு ரஜினி தோல்விமுகத்தில் இருந்து பின்பு வெற்றிப்பாதைக்கு பலமுறை திரும்பியுள்ளார். அதே போல இம்முறையும் ரஜினி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்புவார் என அவரது ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது.

ரஜினி தற்போது நெல்சனின் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டு தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. மேலும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் இன்று ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு ஜெயிலர் படக்குழு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்று மாலை ஆறு மணிக்கு முத்துவேல் பாண்டியன் வருகின்றார் என்று ஜெயிலர் படக்குழு அறிவித்துள்ளது. இதன் மூலம் ஜெயிலர் படத்தில் ரஜினியின் காதாபாத்திரத்தின் பெயர் முத்துவேல் பாண்டியன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு இன்று செம சர்ப்ரைஸ் காத்திருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.