உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது எனக்கு பெருமை: விஷால்

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது எனக்கு பெருமை என்று நடிகர் விஷால் தெரிவித்தார்.

நடிகர் விஷாலின் லத்தி திரைப்படம் வருகிற 22-ந்தேதி வெளிவர உள்ளது. இதையொட்டி நேற்று நடிகர் விஷால் மற்றும் அவருடைய திரைப்பட குழுவினர் திருச்சியில் உள்ள எல்.ஏ.சினிமாஸ் திரையரங்கில் ரசிகர்களை சந்தித்தனர். படத்தின் டிரைலர் காட்சி ரசிகர்களுக்காக திரையிடப்பட்டது. பின்னர், அவர் ரசிகர்கள் மத்தியில் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:-

இலங்கை அகதிகள் முகாம்களில் எனது திரைப்படத்தை திரையிட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் ஒவ்வொரு முறையும் அனுமதி கேட்கிறோம். ஆனால் அனுமதி கிடைப்பதில்லை. லத்தி படத்திற்கும் அனுமதி கேட்பேன். லத்தி படத்திற்கு விற்பனையாகும் ஒவ்வொரு டிக்கெட்டிலிருந்து 1 ரூபாய் விவசாயிகளுக்கு தரப்படும்’ என்றார்.

பின்னர் நடிகர் விஷால் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

லத்தி படத்தில் போலீஸ் உயர் அதிகாரியாக நடித்திருந்தால், அதில் வித்தியாசம் தெரிந்திருக்காது. தற்போது 2-ம் நிலை காவலராக நடித்திருப்பது தான் இந்த படத்தின் வித்தியாசம். இந்த படத்தில் கடைசி 45 நிமிடங்கள் எந்த படத்திலும் இல்லாத அளவிற்கு இருக்கும். நடிகர் சங்க கட்டிடம் ஏற்கனவே கட்டி முடித்திருப்போம். ஆனால் தேர்தலை நிறுத்தி 3 ஆண்டுகள் காலம் தாழ்த்தியதால் தான் அந்த பணி நிறுத்தப்பட்டுள்ளது. விரைவில் அதை கட்டுவோம்.

என் நண்பர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஏற்கனவே அமைச்சராக இருக்கிறார். தற்போது அந்த வரிசையில் உதயநிதி ஸ்டாலினும் இணைந்துள்ளார். எனது நண்பர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது எனக்கு பெருமையாக உள்ளது. நடிகர் சங்கத்தின் கோரிக்கைகளை உரிமையுடன் அவர்களிடம் கேட்பேன். நடிகர் விஜயை வைத்து படம் இயக்க வேண்டும் என்பது எனது ஆசை. நேரமும், காலமும் வரும் போது நல்ல கதையாக விஜய்யிடம் கூறுவேன். தொடர்ச்சியாக படம் நடித்துக்கொண்டு இருக்கிறேன். துப்பறிவாளன் 2 படம் அடுத்தாண்டு வெளியிடப்படும். மிஷ்கினுடன் மீண்டும் இணைய நான் தயாரில்லை. இவ்வாறு அவர் கூறினார்.