தீபிகா படுகோனே காவி உடை சர்ச்சை: பிரகாஷ் ராஜ் ஆதரவு!

ஷாருக்கானின் ‘பதான்’ பட பாடல் சர்ச்சை குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், ஷாரூக்கான், தீபிகா படுகோனே மற்றும் பலர் நடித்துள்ள ‘பதான்’ படத்தின் முதல் சிங்கிளான ‘பேஷ்ரம் ரங்’ பாடல் சில தினங்களுக்கு முன்பு யூடியூபில் வெளியானது. நீச்சல் உடையில் தீபிகா படுகோனேவின் கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ள இந்தப்பாடலின் வீடியோ இணையத்தில் படு வேகமாக வைரலானது. மேலும், இரண்டு நாட்களில் பல மில்லியன் பார்வைகளை கடந்து இப்பாடல் டிரெண்டிங்கில் கலக்கி வருகிறது.

இந்நிலையில் இப்பாடலில் தீபிகா படுகோனே அணிந்துள்ள நீச்சல் உடையின் நிறமும், பாடலுக்கு அவர்கள் வைத்துள்ள ‘பேஷ்ரம் ரங்’ என்ற வார்த்தைகளும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளன. ‘பேஷ்ரம் ரங்’ என்றால் ‘வெட்கமற்ற நிறம்’ என்று அர்த்தம். பாடலின் முடிவில் காவி நிற நீச்சல் உடை ஒன்றை அணிந்து வருகிறார் தீபிகா. இது தொடர்பாக புகைப்படங்களை பகிர்ந்து சமூக வலைத்தளங்களில் பாஜக மற்றும் சில இந்து அமைப்பினர் ‘பதான்’ படத்திற்கு எதிராக கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பாடலின் காட்சியில் காவி நிறத்திலான கவர்ச்சி உடையில் தீபிகா படுகோன் காட்சிகளை நீக்காவிட்டால் படத்தை திரையிட அனுமதி மறுக்கப்படும் என மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் இந்த பிரச்சனையில் ‘பதான்’ படக்குழுவினருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த சர்ச்சை தொடர்பாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அதில், ’காவி உடை அணிந்தவர்கள் சிறுமிகளை கற்பழிக்கிறார்கள், எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகிறார்கள், வெறுப்பு பேச்சு பேசுகிறார்கள். ஆனால் காவி உடை அணிந்து திரைப்படத்தில் மட்டும் நடிக்க கூடாதா? என்று காரசாரமாக கேள்வி எழுப்பிவுள்ளார்.