நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘கனெக்ட்’ திரைப்படம் 300 திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாரா ஆகியோர் அவர்களது சொந்த படத் தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் மூலம் தயாரித்துள்ள படம் ‘கனெக்ட்’. அஷ்வின் சரவணன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நயன்தாரா, சத்யராஜ், அனுபம் கேர் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இந்த வாரம் டிசம்பர் 22ம் தேதி இப்படம் தியேட்டர்களில் வெளியாகிறது. பொதுவாக நயன்தாரா அவர் நடிக்கும் படங்களின் எந்த விதமான புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கும் வர மாட்டார். எவ்வளவு பெரிய ஹீரோ ஜோடியாக நடித்தாலும் அப்படங்களுக்காக ஒப்பந்தம் போடும் போதே எந்த நிகழ்ச்சிக்கும் வர மாட்டேன் என குறிப்பிட்டுவிடுவார் என்று திரையுலகத்தில் சொல்வார்கள். இந்நிலையில் ‘கனெக்ட்’ படத்தின் சிறப்புக் காட்சிகளை நேற்று சென்னையில் உள்ள தியேட்டர் ஒன்றில் இரண்டு காட்சிகளாக நடத்தினார்கள். முதல் காட்சி பத்திரிகையாளர்களுக்காகவும், இரண்டாவது காட்சி படக் குழுவினர், சினிமா பிரபலங்களுக்காகவும் நடத்தினார்கள். அவற்றில் நயன்தாரா கலந்து கொண்டு சிறப்பித்தார்.
சிறப்பு காட்சிக்கு பார்த்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விக்னேஷ் சிவன், “முதன்முதலாக இடைவெளி இல்லாத ஒரு படத்தை உருவாக்கி இருக்கிறோம். டிசம்பர் 22 ஆம் தேதி 300 திரையரங்குகளில் வெளியாகும். நல்லவிதமாக வரும் என்று எதிர்பார்க்கிறோம். குழந்தைகளை நயன்தாரா நன்றாக பார்த்து கொள்கிறார்” என்று தெரிவித்தார்.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற கனெக்ட் பிரீமியர் ஷோவில் விக்கியும் நயனும் ஜோடியாக கலந்துகொண்டனர். அப்போது விக்னேஷ் சிவனை வைத்துக் கொண்டே நயனிடம் ‘ஐ லவ் யூ’ மேடம் எனக் கூறினார் ரசிகர் ஒருவர். இதனால் அந்தக் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து இருவரும் ஜோடியாக படம் பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பினர்.