மீரா மிதுனை போலீஸார் தீவிரமாக தேடி வரும் நிலையில், தற்போது அவர் மீண்டும் ஒரு பிரச்சினையில் சிக்கியுள்ளார். மிஸ் சென்னை போட்டியில் தனியார் நிறுவனத்தை பிரபலப்படுத்த அவர் 50 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டது மோசடி புகாராக மாறியுள்ளது.
மாடலிங் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் மீரா மிதுன். ‘8 தோட்டாக்கள்’ விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யாவுடன் ‘தானா சேர்ந்தக் கூட்டம்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் ரொம்பவே பிரபலமான அவர், பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் பெற்றுள்ள முன்னேற்றம் குறித்து தேவையில்லாமல் பேசி சர்ச்சைகளில் சிக்கினார். இதனால் மீரா மிதுன் மீதும், இதற்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர் சாம் அபிஷேக் மீதும் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த வாக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் இருவரையும் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் இருவர் மீதும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், மீரா மிதுன் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானார். தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வரும் மீரா மிதுன் அடிக்கடி இருப்பிடத்தை மாற்றி வருவதாக காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. கடந்த இரண்டு மாதங்களாக மீரா மிதுன் தலைமறைவாக உள்ளதால், அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப மத்திய குற்றப்பிரிவு போலீஸார் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், மேலும் ஒரு வழக்கில் அவருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மிஸ் சென்னை போட்டியில் தனியார் நிறுவனத்தை பிரபலப்படுத்துவதற்காக நடிகை மீரா மிதுன் ரூ.50,000 பெற்றதாக சொல்லப்படுகிறது. கடந்த 2018ம் ஆண்டு தனியார் நிறுவனம் சார்பில் மிஸ் சென்னை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் தனியார் நிறுவனம் ஒன்றை பிரபலப்படுத்த, மிஸ் தமிழ்நாடு, மிஸ் சவுத் இந்தியா பட்டங்களை வென்ற மீரா மிதுனுக்கு ரூ.50 ஆயிரம் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. தேனாம்பேட்டையைச் சேர்ந்த ரஞ்சிதா பத்ராத்ரி என்பவர் மீரா மிதுனுக்கு 50 ஆயிரம் ரூபாய் கொடுத்ததாகவும், அந்த நிகழ்ச்சி ரத்தானதால் மீரா மிதுன் பணத்தை திருப்பி தரவில்லை எனவும் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மீரா மிதுன் நீதிமன்றத்தில் மனு கொடுத்திருந்தார். அதில், தன் மீது 2019ம் ஆண்டு தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும், அதனை ரத்து செய்ய வேண்டும் எனவும் மீரா மிதுன் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆர்.என் மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவ்ல்துறை தரப்பில் நடிகை மீரா மிதுன் மீது ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், தற்போது அவர் தலைமறைவாகி உள்ளதால் இந்த வழக்கை ரத்து செய்யக்கூடாது என கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகை மீரா மிதுன் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். இதனால், மீரா மிதுனுக்கு மேலும் நெருக்கடி அதிகரித்துள்ளது.