சிறந்த இயக்குநர்கள் பட்டியலில் என் பெயர் இல்லாதது வருத்தமே: சுந்தர் சி!

‘மதகஜராஜா’ திரைப்படத்தின் வெற்றி விழாவில் தன் பெயர் சிறந்த இயக்குநர்கள் பட்டியலில் இடம்பெறாதது குறித்து பேசிய கருத்துகள் வைரலாகி வருகிறது.

விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு உருவான படம் ‘மதகஜராஜா’. இதில் சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். சுமார் 12 ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்த இப்படம், சமீபத்தில் வெளியானது. நடிகர்கள் விஷால், சந்தானம், மனோபாலா ஆகியோரின் நகைச்சுவைக் காட்சிகள் பெரிதாகக் கவனம் பெற்றதால் படம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. மேலும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

மதகஜராஜா திரைப்படத்தின் வெற்றி விழாவில் தன் பெயரை நல்ல இயக்குநர்கள் பட்டியலில் வைக்காதது குறித்து பேசிய கருத்துகள் வைரலாகி வருகிறது. நேற்று நடந்த வெற்றி விழாவில் சுந்தர் சி கூறியதாவது:-

கமர்ஷியல் படங்கள் பெரிய வெற்றி அடையும், ரசிகர்கள் ரசிப்பார்கள். கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு வருவார்கள். ஆனால் என் விஷயத்தில், எனக்கு உள்ளுக்குள் சின்னதாக வருத்தம் இருக்கிறது. அது என்னவெனில், எனக்கான பெரிய பாராட்டுகள் இருக்காது. நல்ல இயக்குநர்கள் என்ற பட்டியல் போட்டார்கள் என்றால் இத்தனை ஹிட் படங்கள் கொடுத்தும் அதில் என் பெயர் இருக்காது.

சினிமா என்பது மிகப்பெரிய வியாபாரம். லட்சக்கணக்கானோர் ஈடுபடுகிற, அவர்களது வாழ்க்கையை நிர்ணயிக்கிற ஒரு வியாபாரம். மிகப்பெரிய பொழுதுபோக்கு சாதனம். அதைத்தாண்டி கோடிக்கணக்கான மக்கள் நம்மை நம்பி காசு கொடுத்து 3 மணிநேரம் அவர்களது கவலைகளை எல்லாம் மறந்து இருக்க வருகிறார்கள். என்னதான் கமர்ஷியல் திரைப்படங்கள் என்ற டேக் இருந்தாலும், 30 வருடங்களாக மக்கள் ஆதரவுடன் இதுவரையில் இருக்கிறேன். மனதிற்குள் இன்னும் சின்ன வருத்தம் இருக்கிறது. அதற்கான இடம் இன்னும் கிடைக்கவில்லையோ என்று. அதற்காக கவலையும் படுவதில்லை. என் கடன் பணி செய்து கிடப்பதுதான். அதுதான் என் கொள்கை. இவ்வாறு அவர் கூறினார்.

இயக்குநர் சுந்தர் சி கமர்ஷியல் திரைப்படங்களை எடுப்பதில் வல்லவர். இரண்டரை மணி நேரம் திரையரங்கில் ஆடியன்சை நன்றாக சிரிக்க வைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு முதல் சாய்ஸ் சுந்தர் சி திரைப்படங்களாகத்தான் இருக்கும்.