இன்று தெருவிற்கு 10 குடி நோயாளிகள் இருப்பதாக பாட்டல் ராதா திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் பலூன் பிக்சர்ஸ் அருண்பாலாஜி தயாரிப்பில் உருவாகியுள்ள “பாட்டல் ராதா” திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் தினகரன் இயக்கத்தில் சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய், மாறன் உள்ளிட்டோர் நடித்துள்ள “பாட்டல் ராதா” திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில், இயக்குநர்கள் பா. ரஞ்சித், வெற்றி மாறன், மிஷ்கின், அமீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு டிரெய்லரை வெளியிட்டனர். நிகழ்ச்சியில் பேசிய அவர்கள், குடி பழக்கத்தால் ஏற்படும் கேடுகள் குறித்து எடுத்துரைத்தனர்.
விழாவில் பேசிய அமீர், “இந்த கதையைப்போல குடி நோயால் பாதிக்கப்பட்ட மனிதர்களைப்பற்றி நான் ஒரு படம் இயக்குவதாக இருந்தேன். அதற்காக கள ஆய்வுகள் செய்தும் வைத்திருந்தேன். பாட்டல் ராதாவை பார்த்தபிறகு இனி அந்த படம் செய்தால் பாட்டல்ராதா பார்த்து எடுத்ததைபோல இருக்கும். எனவே அதை எடுக்கப்போவதில்லை. குடி நோயாளிகளைப்பற்றி இவ்வளவு சிறப்பாக இனி யார் படம் எடுத்தாலும் அது பாட்டல் ராதா படத்தை விட சிறப்பாக எடுக்கமுடியாது. இந்தப்படம் தமிழில் மிகச்சிறந்தபடம்” என்றார்.
இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், “பாட்டல் ராதா திரைப்படம் நன்றாக எழுதி மிக நேர்த்தியாக எடுக்கப்பட்ட படம். இந்தப்படத்தின் முதல் பாதி சிரிக்கவும், இரண்டாம் பாதி சிந்திக்கவும் வைக்கும். கூடவே இந்த சமூகத்திற்கு இப்போதைய காலகட்டத்திற்கு அதுவும் அடிக்சனுக்கு ஆளாகியிருக்கும் இந்த சமூகத்திற்கு மிக அவசியமான படமாக வந்திருக்கிறது. இந்தப்படம் உங்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். 25, 30 வருடங்களுக்கு முன்பு ஒரு ஊரில் அல்லது ஒரு தெரிவில் 5 வீடுகளில் உள்ள ஆண்கள் குடிப்பார்கள். ஒரு வீட்டில் இருப்பவர் குடி நோயாளியாக இருப்பார். இன்று ஒரு தெருவில் ஒருவீட்டில் இருப்பவர் குடிக்காமல் இருந்தாலே பெரிய விஷயமாக இருக்கிறது. தெருவில் 10 குடி நோயாளிகள் இருக்கிறார்கள்” என்று பேசினார்.
நிகழ்வில் பேசிய இயக்குநர் பா. ரஞ்சித், “தினகரன் சிவலிங்கம் என் கல்லூரித் தோழன். நாங்கள் எல்லாரும் ஒன்றாகத்தான் சினிமாவுக்கு வந்தோம். முதலில் நான் இயக்குநராகிவிட்டேன். தினகரனையும் ஜெயக்குமாரையும் (ப்ளூ ஸ்டார் இயக்குநர்) அனிமேஷன் இயக்குநர்களாக மாறச்சொன்னேன். ஆனால், அவர்கள் சினிமா இயக்குநராக மாறிவிட்டனர். படத்தின் கதையை தினகரன் சிறப்பாக எழுதியுள்ளார். நான் 12-வது படிக்கும்போது தற்கொலை செய்யலாம் என முயற்சித்தேன். காரணம், என் அப்பா பெரிய குடிப்பழக்கத்தில் இருந்தார். அதனால், என் அம்மா மிகக் கஷ்டப்பட்டார். இதைப்பார்த்து என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆனால், எப்படியோ தற்கொலை எண்ணத்திலிருந்து மீண்டேன். என் தந்தை மிக நல்லவர், எங்களுக்காக அனைத்தையும் பார்த்துப் பார்த்து செய்தார். ஆனால், குடி அவரை சீரழித்தது. அதனாலேயே, கிட்னி செயலிழந்து உயிரிழந்தார். பாட்டல் ராதா கதையைப் படிக்கும்போது பல இடங்களில் உணர்ப்பூர்வமாக இருந்தது. குடி ஒரு நோய் என்பது புரியவே நீண்ட நாள்கள் ஆகிவிட்டது. இந்தப் படம் ரசிகர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.’ எனத் தெரித்தார்.