நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோர் நடித்துள்ள இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழு மலை’ ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
‘கற்றது தமிழ்’, ‘தங்க மீன்கள்’, ‘பேரன்பு’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ராம் இயக்கத்தில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள புதிய படம் ‘ஏழு கடல் ஏழு மலை’. ‘பிரேமம்’ படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் ஒரு தனி இடம் பிடித்த நடிகர் நிவின் பாலி இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக அஞ்சலி நடித்துள்ளார். முக்கியக் கதாபாத்திரத்தில் சூரி நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
ராமின் படங்களில் ரயில் ஒரு கதாபாத்திரமாகவே இருக்கும். ஆனால், இந்தப் படத்தில் முழுக்க முழுக்க ரயில்தான் களமே. ராமின் நாயகர்களுக்கே உரிய தோற்றமாக நீண்ட தாடியுடன் தோன்றும் நிவின் பாலியின் செய்கைகள் ஒவ்வொன்றும் மிரட்டல் என்றால், மாடர்ன் இளைஞராக வரும் சூரியின் ‘பீதி’யான வெளிப்பாடுகள் தனி ரகம். ஆங்காங்கே வசீகரமாக வந்து போகிறார் அஞ்சலி.
சாதாரண நபரான சூரி கதாபாத்திரத்துக்கும், ‘மரணமற்ற’ அசாதாரண ‘சூப்பர் ஹீரோ’ தன்மை கொண்ட நிவின் பாலிக்கும் இடையிலான பூனை – எலி துரத்தல்தான் மையம் எனும் விதமாக காட்சிகள் அமைந்துள்ளன. நிவின் பாலி பறந்து பறந்து மிரட்ட, சூரி பயந்து பயந்து ஒடுங்குவது வெகுவாக ஈர்க்கிறது. ரயிலைத் தாண்டியும் கதை நகரும் காட்சிகள் வந்து தெறித்து ஆர்வத்தைத் தூண்டுகின்றன.
சர்வ வல்லமை படைத்த அசாதாரண நபரான நிவின் பாலியை ஒற்றை எலியின் உயிரை வைத்து சூரி மிரட்டுவதாக முடியும் ட்ரெய்லர், கதை – கதை மாந்தர்களின் ஆழத்தை உணர்த்துவதாக எதிர்பார்ப்பைத் தூண்டுகிறது. இப்படம், மார்ச் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.