காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தாலும், படத்தின் விளம்பரப்படுத்தும் விழாவில் கலந்து கொண்டதற்காக நடிகை ராஷ்மிகாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
‘சிக்கந்தர்’, ‘கேர்ள் பிரெண்ட்’, ‘குபேரா’, ‘சாவா ’ உள்ளிட்ட பல படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா. சில தினங்களுக்கு முன்பு உடற்பயிற்சி கூடத்தில் அவருக்கு கால் முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவர் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.
பிப்ரவரி 14-ம் தேதி விக்கி கவுசலுடன் அவர் நடித்துள்ள ‘சாவா’ படம் வெளியாகவுள்ளது. லட்சுமன் உடேகர் இயக்கியுள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் பெரும் எதிர்பார்ப்புக்குரிய படமாக இருக்கிறது. இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. இதற்காக மும்பைக்கு கிளம்பும் போது விமான நிலையத்துக்கு ராஷ்மிகா வீல் சேரில் வந்த வீடியோ பதிவு வைரலானது.
‘சாவா’ விழாவில் நடக்க முடியாவிட்டாலும், விக்கி கவுசல் உதவியுடன் மேடையேறி பேசினார். படக்குழுவினர் அவருக்கு சேர் போட்டு அமர்ந்து பேச வைத்தார்கள். இந்த வீடியோ பதிவு இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. மேலும், நடக்க முடியாவிட்டாலும் படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டதற்கு இணையத்தில் பலரும் ராஷ்மிகாவுக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.