பொய் செய்தியை பரப்பியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.வி.பிரகாஷ்!

பெங்களூரு ரெயிலில் அடிபட்டு பயணிகள் இறந்த செய்தி கேட்டு மிகுந்த மன வேதனை அடைந்ததாக ஜி.வி.பிரகாஷ் தெரிவித்திருக்கிறார்.

மராட்டிய மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக அஞ்சி பயணிகள் சிலர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததாக கூறப்படுகிறது. ரெயில் நின்றதும், உடனே பயணிகள் அவசர அவசரமாக கீழே இறங்கினர். அவர்கள் அருகே இருந்த தண்டவாளத்தில் உடைமைகளுடன் நின்றிருந்த நிலையில், எதிர்திசையில் அதிவேகமாக வந்த பெங்களூரு எக்ஸ்பிரஸ் தண்டவாளத்தில் இருந்தவர்கள் மீது மோதியது. நெஞ்சை பதை பதைக்க வைக்கும் இந்த விபத்தில் சிக்கி 13 பயணிகள் பரிதாபமாக பலியாகினர். மேலும் 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்நிலையில், இந்த செய்தி கேட்டு மிகுந்த மன வேதனை அடைந்ததாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-

லக்னோ – டெல்லி ரெயிலில் ஒரு பெட்டியில் தீ பரவியதாக யாரோ பரப்பி விட்ட பொய் தகவலை நம்பி , அபாய சங்கிலியால் ரெயிலை நிறுத்தி விட்டு இறங்கி தப்பிக்க முயன்ற பயணிகளில் பலர் எதிரில் வந்த பெங்களூரு ரெயிலில் அடிபட்டு இறந்த செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன். பொய் செய்தியை பரப்பியவர்கள் மீது அரசு தீவிர சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் வதந்திகளை நம்பாமல் உண்மையை ஆராய்ந்து செயல்பட வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.