தன் அழகை மேம்படுத்த செயற்கை முறையை நாடியதாக தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் குஷி கபூர் தெரிவித்திருக்கிறார்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூர் ஆர்ச்சீஸ் படம் மூலம் நடிகையானார். இந்நிலையில் பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் வெளியான லவ் டுடே படத்தின் இந்தி ரீமேக்கான லவ்யாபா படத்தில் ஜுனைத் கான் ஜோடியாக நடித்திருக்கிறார் குஷி. ஆமீர் கான் மகன் ஜுனைத் ஹீரோவாக நடித்திருக்கும் லவ்யாபா படம் பிப்ரவரி 7ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இதையடுத்து ஜுனைத் கானும், குஷியும் சேர்ந்து படத்தை விளம்பரம் செய்து வருகிறார்கள்.
நடிகையாகும் முன்பு தன் உடல் எடையை வெகுவாக குறைத்தார் குஷி. இந்நிலையில் குஷி 12 வயதாக இருந்தபோது அம்மா ஸ்ரீதேவியுடன் இருந்த வீடியோவை வெளியிட்டு ஒருவர் அவர் தற்போது ரொம்பவே மாறிவிட்டார். லிப் ஃபில்லர்ஸ் செய்திருக்கிறார் என்றார். அதை பார்த்த குஷியோ, நோஸ் ஜாபும் செய்திருக்கிறேன் என இன்ஸ்டாவில் கமெண்ட் செய்தார்.
நடிகைகள் மூக்கு, உதடு ஆகியவற்றில் மாற்றம் செய்வது சாதாரணமாகிவிட்டது. பெரும்பாலும் அது குறித்து அவர்கள் பேச விரும்புவது இல்லை. இந்நிலையில் அப்படி செயற்கையாக மூக்கு, உதடு, முகத்தை மாற்றிய நடிகைகளை பிளாஸ்டிக் என சமூக வலைதளங்களில் விமர்சிக்கிறார்கள். அது குறித்து பேசியிருக்கிறார் குஷி.
பிளாஸ்டிக் பற்றி குஷி கபூர் தற்போது கூறியிருப்பதாவது, நோஸ் ஜாப், லிப் ஃபில்லர்ஸ் செய்வது பெரிய விஷயம் எல்லாம் இல்லை. பிளாஸ்டிக் எனும் வார்த்தை எனக்கு பிடித்திருக்குறது. பிளாஸ்டிக் என்று சொல்வது தான் உங்களை அவமானப்படுத்த பயன்படுத்தப்படும் பெரிய வார்த்தை என மக்கள் நினைக்கிறார்கள். நான் சிறுவயதில் எல்லோரின் கவனமும் என் மீது தான் இருக்க வேண்டும் என நினைப்பேன் என்றார்.
போடாக்ஸ் செய்திருப்பது குறித்து நடிகைகள் மூச்சுவிடாத நேரத்தில் குஷி கபூரோ பிளாஸ்டிக் என்கிற வார்த்தை பிடித்திருக்கிறது என்கிறார். ஸ்ரீதேவி மகள் வேற லெவல். ரொம்ப தைரியசாலி தான் என ரசிகர்கள் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். இனி யாரும் அவரை பிளாஸ்டிக் என்று கிண்டல் செய்யவே முடியாது என்கிறார்கள் ரசிகர்கள்.