தமிழ் நடிகையான ரெஜினா காஸண்ட்ரா தென் இந்திய சினிமாக்களில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருப்பதுடன் தற்போது பாலிவுட்டிலும் கலக்கி வருகிறார். இதையடுத்து தென்னிந்திய சினிமா நடிகர், நடிகைகளின் தேவை பாலிவுட்டினருக்கு அவசியமானதாகிவிட்டதாக பேட்டி ஒன்றில் நடிகை ரெஜினா தெரிவித்துள்ளார்
இதுதொடர்பாக நடிகை ரெஜினா கூறியுள்ளதாவது:-
சமீப காலமாக பாலிவுட் சினிமாக்களில் தென்னிந்திய நடிகர், நடிகைகள் அதிகம் தலை காட்டி வருகிறார்கள். அதேபோல் பாலிவுட் ரசிகர்களின் ரசனையும் தென்னிந்திய சினிமாக்களின் மீது அதிகரித்துள்ளதால், இந்த படங்கள் நல்ல வரவேற்பையும் பெற்று வருகின்றன. இப்போது, பாலிவுட்டினருக்கு வேறு வழியில்லை. முன்பெல்லாம் ரொம்பவே ஆணவ மனப்பான்மையுடன் இருந்தார்கள். நீங்கள் தென்னிந்திய நடிகர், நடிகை என்று தெரிந்தாலே அவர்களுக்கு மொழி ஒரு தடையாக இருந்ததால் கூட அப்படி இருந்திருக்கலாம். ஆனால் எனக்கு மொழி ஒருபோதும் தடையாக இருந்ததில்லை. அதனால். நான் ஒரு தென்னிந்திய நடிகை போல் அவர்களுக்கு தெரியவில்லை.
இப்போது பாலிவுட்டினருக்கு தென் இந்திய நடிகர்களின் தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாக பேண்டமிக் காலத்துக்கு பிறகு பாலிவுட் ரசிகர்களும் தென்னிந்திய பிரபலங்கள் வெகுவாக ரசிக்க ஆரம்பித்ததால் அங்கிருந்து நடிகர்கள் தேவைப்பட்டனர். அந்த வகையில் மிக பெரிய அளவில் ரசிகர்களை சென்றடைய தென்னிந்திய நடிகர்களின் தேவையை உணர்ந்துள்ளார்கள்.
இரு திரவங்கள் கலப்பது போல் இரு வெவ்வேறு திரைத்துறையும் நடிகர், நடிகைககள் இப்படித்தான் இணைத்து கொண்டுள்ளது. ஆரம்பத்தில் தயக்கம் இருந்தபோதிலும், பாலிவுட் திரையுலகினர் தென்னந்திய பிரபலங்களின் திறமையை அறிந்ததோடு, அவர்களால் தங்கள் படங்களை லாபகரமாக மாற்றவும், பரந்த பார்வையாளர்களைச் சென்றடையவும் பயன்படுத்தி தொடங்கியிருக்கிறார்கள். பாலிவுட் படங்களை பார்ப்பதற்கே தென்னிந்திய நடிகர்களின் தேவை உள்ளதை புரிந்துள்ளார்கள். எனவே பாலிவுட்டினருக்கு இப்போது வேறு வழியில்லை. இப்போது அந்த ட்ரெண்ட் உருவாகி பரிணாமம் அடைந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அஜித்குமார் நடித்த விடாமுயற்சி படத்தில் ரெஜினா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாகும் இந்த படம் கடந்த 2023இல் வெளியான கான்ஜூரிங் கன்னப்பன் படத்துக்கு பின்னர் ரெஜினா நடிப்பில் வெளியாகும் தமிழ் படமாக உள்ளது.
பாலிவுட் சினிமாவில் முத்திரை பதித்து வரும் தமிழ் நடிகையாக இருந்து வரும் ரெஜினா நடிப்பில் ஜாட், செக்ஷன் 108 ஆகிய இந்தி படங்கள் உருவாகி வருகிறது. இது தவிர பிளாஷ்பேக் என்ற தமிழ் படத்திலும் நடித்து வருகிறார்.
தமிழ், தெலுங்கு சினிமாக்களில் ஹீரோயினாக நடித்து வந்த நடிகை ரெஜினா காஸண்ட்ரா, 2019இல் வெளியான ஏக் லட்கி கோ தேகா தோ ஐசா லகா என்ற படம் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார். இதன் பின்னர் ராக்கெட் பாய்ஸ், ஷூர்வீர், ஃபார்ஸி, ஜான்பாஸ் ஹிந்துஸ்தான் கே போன்ற இந்தி வெப்சீரிஸ்களில் நடித்து பாலிவுட் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையானார். தற்போது பாலிவுட் சினிமாவில் முத்திரை பதித்து வரும் தமிழ் நடிகையாகவும் திகழ்கிறார்.