விடாமுயற்சி படக்குழுவுக்கு நடிகை திரிஷா நன்றி தெரிவித்துள்ளார்.
அமீர் இயக்கத்தில் சூர்யா, திரிஷா, லைலா உள்ளிட்டோர் நடித்த ‘மௌனம் பேசியதே’ திரைப்படம் கடந்த 2002-ம் ஆண்டு வெளியானது. ‘ஜோடி’ உள்ளிட்ட படங்களில் துணை நடிகையாக நடித்திருந்த நடிகை திரிஷா, இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து ‘சாமி’, ‘கில்லி’, ‘ஆறு’ உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
அண்மையில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’, ‘லியோ’ உள்ளிட்ட படங்களிலும் திரிஷாவின் நடிப்பு பாராட்டைப் பெற்றது. தற்போது அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் நடித்து முடித்துள்ளார். கடந்த 6-ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், விடாமுயற்சி படக்குழுவுக்கு நடிகை திரிஷா நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘என்னுடைய திரை வாழ்க்கையில் சிறந்த பயணங்களில் ஒன்றாக ‘விடாமுயற்சி’ அமைந்தது. படக்குழுவுக்கு நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.