மன அழுத்தத்தால் கதறி அழுதேன்: தீபிகா படுகோன்!

‘எனக்குத் தெரியாது. நான் உதவியற்றவளாகவும் நம்பிக்கையற்றவளாகவும் உணர்கிறேன் என்பது மட்டும்தான்’ என்று தீபிகா படுகோன் கூறியுள்ளார்.

மனநலம் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட பரிக்ஷா பே சர்ச்சாவின் சமீபத்திய எபிசோடில், தீபிகா படுகோன் பேசினார். அப்போது அவர் தான் மன அழுத்தத்துடன் போராடிய கதையை பற்றி பேசினார். அவர் கூறியதாவது:-

நான் பள்ளியிலிருந்து விளையாட்டுக்கு மாறினேன், பின்னர் மாடலிங், இறுதியில் நடிப்புத்துறையில் தஞ்சம் அடைந்தேன். 2014ம் ஆண்டு என்னுடைய உடல் மயக்கம் அடையும்வரை உழைத்தேன். பின்னர்தான் நான் மன அழுத்தத்துடன் போராடுகிறேன் என்பது தெரிந்தது.

மன அழுத்தம் பற்றிய விஷயம் என்னவென்றால், அது கண்ணுக்கு தெரியாதது; நீங்கள் அதை எப்போதும் பார்க்க முடியாது. நம்மைச் சுற்றியுள்ளவர்கள் கவலை அல்லது மனச்சோர்வுடன் போராடலாம். ஆனால் நமக்குத் தெரியாது; ஏனென்றால் வெளியில், அவர்கள் மகிழ்ச்சியாகவும், சாதாரணமாகவும் இருப்பது போல தெரிகிறார்கள்.

ஒரு முறை, பெங்களூர் செல்லும் தினத்தன்று, என் அம்மா என்னை பார்க்க மும்பை வந்திருந்தார். திடீரென நான் உடைந்து அழுது விட்டேன். என் குடும்பத்தினர் என் வேலையைப் பற்றி எல்லா வகையான கேள்விகளையும் கேட்டார்கள். ஆனால் என்னால் சொல்ல முடிந்தது, ‘எனக்குத் தெரியாது. நான் உதவியற்றவளாகவும் நம்பிக்கையற்றவளாகவும் உணர்கிறேன் என்பது மட்டும்தான். ஆனால், அதிர்ஷ்டவசமாக, என் அம்மா என்னுடைய அறிகுறிகளை அடையாளம் கண்டு, நான் ஒரு உளவியலாளரைப் பார்க்க பரிந்துரைத்தார். நம் நாட்டில், மன ஆரோக்கியம் ஒரு வகையான களங்கத்தைக் கொண்டுள்ளது. அதைப் பற்றி பேசுவது கடினம். ஆனால், நான் அதைப் பற்றி பேசத் தொடங்கியவுடன், நான் இலகுவாக உணர்ந்தேன். கவலை, மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு யாரையும் பாதிக்கலாம். அதைப் பற்றி பேசுவது உண்மையிலேயே அந்த சுமையை எளிதாக்குகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

தீபிகா தனது ‘லைவ் லவ் லாஃப்’ அறக்கட்டளை மூலம் மனநல விழிப்புணர்வுக்கான தூதகர் போல செயல்பட்டு வருகிறார். மனநோயுடனான தனது தனிப்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதோடு, மனச்சோர்வை எதிர்த்துப் போராடுவதற்கான உதவிக்குறிப்புகளையும் குழந்தைகளுக்கு வழங்கி வருகிறார்.