தனது மகள் பவதாரணியின் பெயரில், சிறுமிகள் அடங்கிய இசைக்குழுவை தொடங்க உள்ளதாக இளையராஜா அறிவித்துள்ளார்.
இளையராஜாவின் மகள் பவதாரிணியும் இசை உலகில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை கொண்டிருந்தார். இளையராஜாவின் இசையில் ராசையா படத்தில் இடம் பெற்று இருக்கும் மஸ்தானா.. மஸ்தானா.. பாடல் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார். அதே போல் அநேகன், இரும்பு குதிரை, பிரியாணி, மங்காத்தா, பிரண்ட்ஸ், தனம், பிதாமகன், நேருக்கு நேர் என்று பல படங்களில் பாடல்கள் பாடி ஹிட் கொடுத்திருக்கிறார்.
இளையராஜா இசையில் வெளியான பாரதி படத்தில் ‘மயில் போல பொண்ணு ஒன்னு’ என்ற பாடல் அவருக்கு தேசிய விருது வாங்கி கொடுத்தது. ஒரு சில படங்களில் இசையமைப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் புற்றுநோய் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரணி உயிரிழந்தார்.
இந்நிலையில், பவதாரணியின் பெயரில் 15 வயதுக்குட்பட்ட சிறுமிகள் அடங்கிய இசைக்குழு ஒன்றை தொடங்க உள்ளதாக இளையராஜா அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-
பவதாரணி என்னிடம் பெண்கள் மட்டுமே அடங்கிய இசைக்குழுவை தொடங்க வேண்டும் என்று விரும்புவதாக கூறியிருந்தார். அவர் கடைசியாக விருப்பப்பட்ட விஷயம் அதுதான். நான் இரண்டு நாட்களுக்கு முன்பு மலேசியாவில் இருந்தபோது, மாணவிகள் பலர் குழுக்களாக வந்து பாடல்களை பாடிக் காட்டினார்கள். அதைப் பார்த்த பின்னர் எனக்கு பவதாரணி சொன்னது நினைவுக்கு வந்தது. அவர் ஆசைப்பட்டது போல், 15 வயதுக்குட்பட்ட சிறுமிகள் மட்டுமே அடங்கிய ஒரு இசைக்குழுவை தொடங்கப் போகிறேன். இதற்காக மலேசியாவில் ஏற்கனவே 2 குழுக்களை தேர்வு செய்துவிட்டேன்.
உலகம் முழுவதும் இருந்து ஆட்களை தேர்வு செய்து இந்த இசைக்குழுவை உருவாக்க திட்டமிட்டிருக்கிறோம்.
இதில் இணைய விரும்பும் மாணவிகள் தங்கள் பெயர், விவரங்களை கொடுத்த பின்னர், ஆடிஷன் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள். பவதாரணியின் பெயர் என்றென்றும் நிலைத்திருக்கும் வகையில் இந்த இசைக்குழு தொடங்கப்பட்டு, உலகம் முழுவதும் பரவும் என்ற நம்பிக்கையில் ஆண்டவனை வேண்டிக்கொண்டு இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன். இவ்வாறு இளையராஜா கூறியுள்ளார்.