நான் நடித்த சிறந்த படப்பிடிப்புகளில் ‘சச்சின்’ படமும் ஒன்று: ஜெனிலியா!

விஜய், ஜெனிலியா நடிப்பில் ஜான் மகேந்திரன் இயக்கத்தில் 2005ஆம் ஆண்டு வெளியான படம் சச்சின். தாணு தயாரித்திருந்த இப்படத்தில் வடிவேலு, ரகுவரன், சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகியிருந்திருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் போதிய வரவேற்பு பெறவில்லை. ஆனால் பின்பு இப்படம் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. பாடல்களும் இன்றளவும் முணுமுணுக்கப்படுகிறது.

இந்த நிலையில் இப்படம் வெளியாகி 20 வருடங்களை கடக்கவுள்ள நிலையில் தற்போது ரீ ரிலீஸாகவுள்ளது. கோடையில் வெளியாகும் என தெரிவித்த படத்தின் தயாரிப்பாளர் தேதி குறித்து இன்னும் தெரிவிக்கவில்லை. விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில் படத்தின் ஹீரோயின் ஜெனிலியா, படம் ரீ ரிலீஸாவது தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார். அதற்கு தாணு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். அவரது பதிவிற்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ள ஜெனிலியா, “எனக்கு சச்சின் படத்தை கொடுத்து படப்பிடிப்பு முழுவதும் என்னை நன்றாகப் பார்த்துக் கொண்ட உங்களுக்கு நன்றி. நான் நடித்த சிறந்த படப்பிடிப்புகளில் இந்தப் படமும் ஒன்று” எனப் பதிவிட்டுள்ளார்.