அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டிராகன்’ திரைப்படம் வெளியான முதல் 3 நாட்களிலேயே ரூ.50 கோடியை கடந்துவிட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்ட தகவலில், டிராகன் படம் முதல் மூன்று நாட்களில் உலக அளவில் ரூ.50.22 கோடியை எட்டியுள்ளது. ஓபனிங் வார இறுதியில், தமிழகத்தில் மட்டும் ரூ.24.5 கோடி, ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ரூ.6.25 கோடி, கேரளா, கர்நாடகா மற்றும் வட இந்தியாவில் ரூ.4.37 கோடி, வெளிநாடுகளில் ரூ.14.7 கோடியை வசூலித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்துள்ளதால், ரூ.35 கோடி அளவில் பட்ஜெட் கொண்ட இப்படம், இரண்டாவது வார இறுதியில் ரூ.100 கோடி வசூலை எட்டி சாதனை புரியும் என்று வர்த்தகர்கள் கணித்துள்ளனர்.
பிப்.21-ம் தேதி வெளியான படம் ‘டிராகன்’ படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து உலகமெங்கும் அந்நிறுவனமே விநியோகித்தது. முதல் நாளைக் காட்டிலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அள்ளியது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோகர், மிஷ்கின், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.
கெத்தான கல்லூரி வாழ்க்கை, அங்கு அவளே உலகமென இருக்கும் காதல், பேராசிரியர்களை மதிக்காத தெனாவட்டு, அரியருடன் வெளியேறி, பெற்றோரை ஏமாற்றும் பிழைப்பு, குறுக்கு வழி முன்னேற்றத்துக்காகச் செய்யும் ஒரு ஃபிராடுதனம், அதுவே ஒருநாள், வாழ்வின் மொத்த சுகத்துக்கும் எமனாக வந்து நிற்கும் துயரம் என ஓர் இளைஞனின் வாழ்வியலை, இயல்பாகவும் எங்கேஜிங்காகவும் படமாக்கி இருக்கிறார் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து.