‘தனுஷின் நடிப்புக்கு ஈடு கொடுக்க என்னால் முடியாது’ என்று ஜி.வி.பிரகாஷ் கூறினார்.
இசை மற்றும் நடிப்பு என இரண்டு துறையிலும் பயணிக்கும் ஜி.வி. பிரகாஷ் தற்போது நடிகராக தமிழில் ‘இடிமுழக்கம்’, ’13’, ‘கிங்ஸ்டன்’, ‘மென்டல் மனதில்’ ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில், வருகிற மார்ச் 7-ம் தேதி ‘கிங்ஸ்டன்’ படம் வெளியாகிறது. மேலும் இசையமைப்பாளராக ‘வீர தீர சூரன்’, ‘இட்லி கடை’,’பராசக்தி’ என ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். அதோடு அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்திற்கும் இசையமைப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ் சென்னையில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, தனுஷ் நடிப்புடன் அவரை ஒப்பிட்டு ஒரு கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். அதற்கு ஜி.வி.பிரகாஷ் பதிலளிக்கையில், ‛‛சினிமாவில் குழந்தை பாடகராக தோன்றி அதன்பிறகு இசையமைப்பாளராகி ஒரு நிலையான இடத்தை பிடிப்பதற்கு நிறைய கஷ்டங்களை சந்தித்தேன். அதேபோல் தொடர்ந்து படங்களில் நடித்தும் வருகிறேன். ஆனால் தனுஷ் ஒரு சிறந்த நடிகர். அவரது நடிப்புக்கு என்னால் ஈடு கொடுத்து நடிக்க முடியாது. அந்த அளவுக்கு அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர் தனுஷ்” என்று கூறினார்.