தமிழில் பேசி தமிழ் ரசிகர்களுக்கு நன்றி கூறிய நடிகை கயாடு லோகர்!

டிராகன் படத்தில் நடித்த நடிகை கயாடு லோகர், தமிழில் பேசி தன்னை ஆதரித்த தமிழ் ரசிகர்களுக்கு நன்றி கூறியிருக்கிறார்.

தமிழில் அண்மையில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் என்னும் படத்தில், ஹீரோ பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடித்தவர், கயாடு லோகர். இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கும், கயாடு லோகருக்கும் உண்டான காதல் கெமிஸ்ட்ரி திரையில் செமயாக பற்றிக்கொண்டது. இதற்கு, நடிகை கயாடு லோகர், டிராகன் படத்தில் இரு ஹீரோயின்களில் ஒருவர் தான். இருந்தாலும் நடிகை கயாடு லோகர் திரையில் தோன்றிய காட்சிகளில் எல்லாம் அரங்கம் அதிர்கிறது. அவருக்கு தமிழ்நாட்டில் ரசிகர்கள் உருவாகிவிட்டார்கள்.

இந்நிலையில் பிப்ரவரி 21ஆம் தேதி ரிலீஸான டிராகன் படம் இதுவரை வசூலில் 78 கோடிக்கும் மேல் வசூலித்து இருக்கிறது. இதனால் மொத்த படக்குழுவும் மகிழ்ச்சியில் இருக்கிறது. குறிப்பாக நடிகை கயாடு லோகர். ஏனென்றால், இதுதான் அவருக்கு முதல் தமிழ்ப்படம். முதல் படத்திலேயே தனக்காக சிலர் படம் பார்க்க வருவதை அறிந்த நடிகை கயாடு லோகர் ஒரு காணொலியில் நன்றி தெரிவித்து இருக்கிறார்.

அதில் நடிகை கயாடு லோகர் பேசுகையில், ‘’எனக்கு எங்கே ஆரம்பிக்கிறதுன்னு தெரியல. எனக்கும் டிராகனுக்கும் பல்லவிக்கும் கிடைக்கிற இந்த அன்பும் ஆதரவும், மிகையான உணர்வு. தியேட்டரில் எனக்கு நீங்கள் அடிக்கிற விசில் ஆக இருக்கட்டும், இன்ஸ்டாவில் என்னுடைய நன்றி, ஸ்டோரீஸ், ஷேர்ஸ் ஆக இருக்கட்டும் மற்றும் அழகான கமெண்ட்ஸ்களாக இருக்கட்டும். இதெல்லாம் பார்க்கும்போது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்குங்க.

நான் தமிழ்ப்பொண்ணு இல்லைங்க. எனக்கு தமிழ் சரியாகப் பேச வராது. ஆனால், நீங்கள் எனக்கு கொடுக்கிற அன்பு, விலைமதிப்பற்றதாக நினைக்கிறேன். நான் நம்புகிறேன் இந்த அன்பை என் படங்களின் மூலமாக உங்களுக்குத் திருப்பித் தருவேன். மற்றும் உங்களைப் பெருமைப்படுத்துவேன்” என நடிகை கயாடு லோகர் நன்றி தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து தெலுங்கில் பேசிய நடிகை கயாடு லோகர், ‘’நான் இப்போது தெலுங்கு கற்றுக்கொண்டு இருக்கிறேன். உங்களது அனைவருடைய அன்புக்கும் ரொம்ப ரொம்ப நன்றி. நீங்கள் என்னை பெரிய அளவில் சினிமாவில் வரவேற்பு செய்திருக்கிறீர்கள். உங்களுடைய அன்பு ரொம்ப ரொம்ப எனக்கு ஸ்பெஷல். விரைவில் டோலிவுட்டுக்கு வருகிறேன்’’ எனத் தெரிவித்தார்.

அதன்பின் ஆங்கிலத்தில் பேசிய நடிகை கயாடு லோகர், ‘’எல்லோரும் எனது பணியைப் பாராட்டுகிறீர்கள். எல்லோரும் என்னை திரையில் பார்த்து நேசிக்கிறீர்கள். இதுக்குமேல் நான் என்ன கேட்கப்போகிறேன். அதனால், மீண்டும் உங்களுக்கு நன்றியைக் கூறுகிறேன். நீங்கள் என்னை தியேட்டரில் பார்க்க வாழ்த்துகிறேன்’’ எனக் கூறினார்.

நடிகை கயாடு லோகர், வட கிழக்கு இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தின் தேஜ்பூர் நகரைப் பூர்வீகமாகக் கொண்டவர். தற்போது புனே நகரில் வசித்து வருகிறார். இவர் ஒரு பக்காவான 2கே கிட். இவர் 2000ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி பிறந்து இருக்கிறார். மேலும், கயாடு லோகர் பி.காம் முடித்துவிட்டு மாடலிங்கில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது முதன்முறையாக முகில்பேட் என்னும் கன்னடப் படம் மூலம் சினிமாவில் கதாநாயகியாக ஆனார்.