ஆதி ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆதி ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘குட் பேட் அக்லி’. இதில் அஜித், த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகவுள்ளது.
கேஜிஎஃப்’ பாணி பில்டப்புடன் தொடங்குகிறது டீசர். “ஏகே ஒரு ரெட் டிராகன்.. அவன் போட்ட ரூல்ஸை அவனே பிரேக் பண்ணிட்டு வந்திருக்கான்னா, அவன் மூச்சுலயே முடிச்சுடுவான்’ என்று தெறிக்கிறது அந்த பில்டப். பில்டப் வசனத்துக்கு இடையே அஜித்தின் அறிமுகம் அதகளமாக இருக்கிறது. ‘நாம எவ்ளோ ‘குட்’டா இருந்தாலும்.. இந்த உலகம் நம்மள ‘பேட்’ ஆக்குது’ என்ற அஜித்தின் வாய்ஸும், அப்போது வருகின்ற அவரது வெவ்வேறு கேட்டப்களும் ஈர்க்கிறது. முழுக்க முழுக்க அஜித்தின் ஆக்ஷன்களும், எமோஷன்களும் வெளிப்படும் இந்த டீசர், ‘குட் பேட் அக்லி’ நிச்சயம் அவரது ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் எனத் தெரிகிறது. அதற்கு ஏற்பவே, பீப் சொல்லுக்குப் பிறகு ‘காட்றேன்..’ என டீசரில் முடிக்கிறார் அஜித்.
குட் பேட் அக்லி’ டீசரில் டெம்ப் கூட்டும் ஜி.வி.பிரகாஷ்குமாரின் பின்னணி இசை வசீகரித்துள்ளது. ‘குட் பேட் அக்லி’ படம் அறிவிக்கப்பட்டபோது, அதன் இசையமைப்பாளராக இருந்தார் தேவி ஸ்ரீ பிரசாத். பின்பு ‘புஷ்பா 2’ படத்தில் தயாரிப்பு நிறுவனத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பாடல்களை மட்டும் தேவிஸ்ரீ பிரசாத் கவனிப்பார் என தகவல்கள் வெளியாகின. பின்னணி இசை பணிகளை முழுமையாக ஜி.வி.பிரகாஷ் கவனிப்பார் என்றார்கள். தற்போது ‘குட் பேட் அக்லி’ படத்தில் இருந்து தேவி ஸ்ரீபிரசாத் முழுமையாக படத்திலிருந்து நீக்கப்பட்டது டீசர் மூலம் தெரியவந்துள்ளது. இசையமைப்பாளர் என்று ஜி.வி.பிரகாஷ் பெயரை மட்டுமே படக்குழு குறிப்பிட்டுள்ளது. இன்று இரவு 7:03 மணிக்கு வெளியான இந்த டீசரை வைத்தே தமிழகமெங்கும் உள்ள முக்கிய திரையரங்குகளில் அஜித் ரசிகர்களுக்கான கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.