பாடகி ஸ்ரேயா கோஷலின் எக்ஸ் பக்கம் ஹேக் செய்யப்பட்டது!

பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலின் எக்ஸ் பக்கத்தில் அத்துமீறல் நடந்துள்ளது. ஹேக் செய்யப்பட்ட தனது பக்கத்தை எவ்வளவோ முயற்சி செய்தும் மீட்க முடியவில்லை என்று ஸ்ரேயா கோஷல் கவலை தெரிவித்துள்ளார்.

பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் இந்தி, தமிழ், தெலுங்கு, நேபாளி, பஞ்சாபி, துளு, ஆங்கிலம் உட்பட பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். குறிப்பாக, தமிழில் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார். அவரின் தனது எக்ஸ் பக்கம் முடக்கப்பட்டிருப்பதாக இன்ஸ்டாவில் தெரிவித்துள்ளார்.

அந்தப் பதிவில் அவர், “ரசிகர்கள் மற்றும் நண்பர்களுக்கு.. என்னுடைய எக்ஸ் பக்கம் கடந்த 13-ஆம் தேதி முதல் முடக்கப்பட்டு உள்ளது. அதனை சரி செய்ய எக்ஸ் குழுவினரை தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ஆனால், தானியங்கி முறையில் வரும் பதில்களை தவிர எந்த ஓர் உதவியும் எனக்கு கிடைக்கப் பெறவில்லை. எனது கணக்கை டெலிட் செய்யவோ, உள்ளே நுழையவோ முடியவில்லை. இதனால் தயவு செய்து, எனது எக்ஸ் பக்கத்தில் இருந்து வரும் எந்த லிங்கையும் க்ளிக் செய்ய வேண்டாம்.

அதே வேளையில், அந்தப் பக்கத்தில் வரக் கூடிய எந்த தகவலையும் நம்ப வேண்டாம். அவ்வாறு வருபவை அனைத்தும் போலி மற்றும் மோசடி செய்திகளாக இருக்கலாம். கணக்கு மீட்கப்பட்ட பிறகு, உடனடியாக வீடியோ மூலம் தகவல் தெரிவிக்கிறேன்” என்று அலர்ட் பதிவிட்டுள்ளார்.

அவரது ரசிகர்கள் இச்சம்பவம் குறித்து கவலையும், ஆதரவையும் ஒருசேர தெரிவித்துள்ளனர்.