ஜான்வி கபூர் பிறந்தநாளையொட்டி ‘ஆர்சி16’ படத்தில் நடிக்கும் ஜான்வி கபூர் கதாபாத்திரத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் தனது 16-வது படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக ஆர்.சி 16 என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கிறார். ராம் சரணுடன் ஜான்விகபூர் நடிக்கும் முதல் படம் இதுவாகும். இயக்குனர் புச்சி பாபு இயக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
நடிகை ஸ்ரீதேவி – தயாரிப்பாளர் போனி கபூரின் மூத்த மகளான நடிகை ஜான்வி கபூர் பாலிவுட் மட்டுமல்லாது தென்னிந்திய சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார். ‘கோலமாவு கோகிலா’ படத்தின் இந்தி ரீமேக்கில் நாயகியாக நடித்து பாராட்டுகளைப் பெற்றார். ஜூனியர் என்டிஆரின் 30-வது படமான ‘தேவரா பாகம்-1’ மூலம் தென்னிந்திய திரையுலகில் கதாநாயகியாக கால் பதித்துள்ளார். மேலும் பா. ரஞ்சித் தயாரிப்பில் உருவாகும் புதிய தமிழ் வெப் தொடரின் மூலம் தமிழ் சினிமாவிலும் காலடி எடுத்து வைக்கவுள்ளார் என தகவல் கூறப்படுகிறது.
ஜான்வி கபூர் பிறந்தநாளையொட்டி ‘ஆர்சி16’ படத்தில் நடிக்கும் ஜான்வி கபூர் கதாபாத்திரத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.