நடிகை சோனா, தனது ஸ்மோக் பயோபிக் குறித்தும் அது உருவாகியுள்ள விதம், தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் குமாரின் பூவெல்லாம் உன் வாசம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சோனா. இவர், பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து புகழ் பெற்றவர். சமீப காலங்களில் சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகி இருந்த சோனா, தற்போது தனது வாழ்க்கை வரலாற்றை பொது வெளிக்கு கொண்டு வரும் நோக்கில் வெப் சீரஸ் ஒன்றை இயக்கி உள்ளார்.
ஸ்மோக் என பெயரிடப்பட்ட அந்த வெப் சீரிஸ் 8 எபிசோடுகளாக உருவாகியுள்ளது. இதில் சோனாவின் 5 வயது முதல் தற்போது வரை நடந்த சம்பவங்கள் தொகுத்து காட்சிகளாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த வெப் சீரிஸில் 4 வகையான சோனா இடம் பெறுவார் என நடிகை சோனா கூறியுள்ளார்.
இதுகுறித்து நடிகை சோனா யூடியூபிற்கு பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியில், ஸ்மோக் வெப் சீரிஸ் மட்டுமல்லாது தனது தனிப்பட்ட விஷயங்களையும் பகிர்ந்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது:-
நான் சினிமாவுக்கு நடிக்க வரக் காரணமே என் அம்மா தான். எங்க அம்மா சக்கரை வியாதி மாதிரி சில நோயால பாதிக்கப்பட்டிருந்தாங்க. அவங்கள பாத்துகணும்ங்குறதுக்காக தான் சினிமாவுக்குள்ள வந்தேன். ஆரம்பத்துல சினிமா என்ன ரொம்ப பயப்பட வச்சது. 2, 3 தடவ சினிமாவே வேணாம்ன்னு எல்லாம் யோசிச்சிறுக்கேன். படம் எதுவும் பண்ணாமலும் இருந்திருக்கேன்.
அப்புறம் பணம்ங்குறது பெரிய போதை. வாரத்துக்கு ஒரு படம் பண்ண அட்வானஸ் எல்லாம் தருவாங்க. அது திரும்ப என்ன நடிக்க கூட்டிட்டு வந்தது. ஒரு வயசுக்கு மேல நாம என்ன பண்ணிட்டு இருக்கோம்ன்னு தோன ஆரம்பிச்சிருச்சி. என்னோட வேலை எனக்கு பிடிக்கல. அம்மாவும் இறந்துட்டாங்க.
ஒரு 3 வருஷம் பைத்தியம் பிடிச்ச மாதிரி போயிடுச்சு. யாருகிட்டயும் பேச பிடிக்கல. எங்கயும் போக பிடிக்கல. ரொம்ப கஷ்டப்பட்டேன். அப்போ தான் நாம என்ன தப்பு பண்றோம். நம்மள சுத்தி என்ன தப்பு நடக்குதுன்னு யோசிக்க ஆரம்பிச்சேன். இந்த பிறந்தநாளுக்கு எல்லாம் உறுதிமொழி எடுக்குற மாதிரி, நான் இனிமே என்ன எல்லாம் பண்ணனும்ன்னு எழுதி வச்சு உறுதிமொழி ஏத்துகிட்டு, என்ன நானே பாத்துக்க ஆரம்பிச்சேன்.
நான் சினிமாவுல நடிக்கும் போது, பல பேரால ரொம்ப கஷ்டப்பட்டுருக்கேன். என்ன கொல்ல எல்லாம் ரொம்ப ட்ரை பண்ணிருக்காங்க. ரொம்ப அசிங்கப்படுத்தி இருக்காங்க. அவங்களே வெட்கமே இல்லாம இருக்கும் போது எனக்கு என்னன்னு முடிவெடுத்து என்ன கவனிக்க ஆரம்பிச்சப்போ தான் எனக்குள்ளவே நிறைய மாற்றம் வந்தது. அந்த சமயத்துல தான் நான் என்ன பத்தி படமா எடுக்க ஆசப்பட்டேன். அப்புறம் கடகடன்னு எல்லாத்தையும் எழுத ஆரம்பிச்சேன். 2014லயே ஸ்கிரிப்ட் எல்லாம் முடிச்சுட்டேன். அந்த படம் எடுக்க ஆரம்பிச்சப்போ பல இடத்துல இருந்து மிரட்டல். இத பண்ண கூடாது அத பண்ண கூடாதுன்னு. அப்படியே வச்சு நசுக்குறாங்க. ஒன்னும் முடியல என்னால. எனக்கு குடும்பம் குழந்தைங்கன்னு இருந்தா கூட யார பத்தியாவது யோசிக்கலாம் எனக்கு யாரும் இல்லாததுனால பெருசா எடுக்கல.
நானும் ஒரு படம் எல்லாம் எடுத்து லாஸ் ஆச்சு. அது என் பணம். என்ன யாரும் கேக்க மாட்டாங்க. ஆனா, இப்போ நான் பண்ற வெப் சீரிஸ் ஓடிடிக்கு வித்துருக்கேன். அதுக்காக கை நீட்டி காசும் வாங்கி இருக்கேன். அப்போ நான் அவங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கு. அதுனால கொஞ்சம் பொறுப்பா எடுத்தேன். வழக்கமா ஒருத்தரோட பயோபிக் எடுக்குறாங்கன்னா, முடிஞ்ச வரைக்கும் நல்லவங்களா காட்ட முயற்சிப்பாங்க. ஆனா இந்த வெப் சீரிஸ்ல அப்படி எதும் இல்ல. நானும் ஒரு மனுசி தான். எல்லோரும் தப்பு பண்ணுவாங்க. அத நாம ஒத்துக்கணும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.