குட் பேட் அக்லி முதல் பாடல் விரைவில் வெளியாகிறது!

குட் பேட் அக்லி திரைப்படத்தின் முதல் பாடல் எப்போது வெளியிடப்படும் என்ற தகவலை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் சமூகவலைதளம் வழியாகப் பகிர்ந்துள்ளார்.

அஜித் குமாரின் ரௌடி பாய் கெட்டப்பில் அவரது அடுத்த படமாக திரைகளில் வெளியிடப்பட காத்திருக்கிறது ‘குட் பேட் அக்லி’. இளம் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் முதல்முறையாக பெரும் பட்ஜெட்டில் இயக்கிள்ள குட் பேட் அக்லி படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே, அண்மையில் வெளியாகி சற்றே குறைந்த வரவேற்பைப் பெற்றுள்ள ‘விடாமுயற்சி’, அஜித் ரசிகர்களுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் ஆக அமைந்திருந்ததை யாரும் மறுக்க முடியாது. இந்த நிலையில், ஏப்ரல் 10-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தை அஜித் ரசிகர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், அப்படத்தின் முதல் பாடல் எப்போது வெளியிடப்படும் என்ற தகவலை அப்படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இன்று(மார்ச் 8) அளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் ரிலீஸ்; சுடச்சுட தயாராக்கிக் கொண்டிருக்கிறோம்” என்று குறிப்பிட்டு அஜித் ரசிகர்களைக் குஷிப்படுத்தியுள்ளார்.

கோலிவுட் மட்டுமல்லாது பல மொழிகளிலும் படு பிஸியான இசையமைப்பாளராக கலக்கி வரும் ஜிவி பிரகாஷ் குமார் நிச்சயம் தங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வார் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர் அஜித் ரசிகர்கள்.