மாளவிகா மோகனனுக்கு பிடித்த தமிழ் படம் 96!

நடிகை மாளவிகா மோகனன் தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகைகளில் ஒருவராக உள்ளார். இவரது படங்களுக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் உள்ளார்களோ அதை விட இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு ரசிகர்கள் அதிகம். அப்படி இருக்கும் போது, அவ்வப்போது மாளவிகா மோகனன் தனது ரசிகர்களுடன் எக்ஸ் பக்கத்தில் அரட்டை அடிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். அந்த வகையில் இவர் இன்று அதாவது மார்ச் 11ஆம் தேதி தனது ரசிகர்களுடன் டிவிட்டரில் பேசினார். இதில் சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

மாளவிகா மோகனன் தென்னிந்திய சினிமா மட்டும் இல்லாமல், பாலிவுட் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். கிடைக்கும் பட வாய்ப்புகளில் எல்லாம் நடிக்காமல், தனது கதாபாத்திரம் கவனம் பெறும் என்றால் மட்டும் கமிட் ஆகி நடிக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர். தற்போது இவர், பல படங்களில் நடித்து வருகிறார். இதில் தமிழில் சர்தார் 2, தெலுங்கில் ராஜா சாப் மற்றும் மலையாளத்தில் ஹிருதயபூர்வம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த மூன்று படங்களும் இந்த ஆண்டே ரிலீஸ் ஆகவுள்ளது. இதில் சர்தார் 2 படத்தில் கார்த்தி உடனும், ராஜாசாப் படத்தில் பிரபாஸ் உடனும், ஹிருதயபூர்வம் படத்தில் மோகன்லால் உடனும் நடித்து வருகிறார். இந்த படங்கள் ரிலீஸ் ஆனால் மாளவிகா மோகனனின் மார்கெட் மேலும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. இந்தி படங்களில் கிளாமரில் புகுந்து விளையாடினால்தான் ஸ்கோர் செய்ய முடியும் மார்க்கெட்டில் நீடிக்க முடியும் எனத் தெரிந்து கொண்ட மாளவிகா மோகனன் அங்கு சென்றால் கிளாமருக்கு எப்போதும் கிரீன் சிக்னல் காட்டுகிறாராம்.

இந்நிலையில் ரசிகர்களுடன் உரையாடிய மாளவிகா மோகனனிடம் அவரது ரசிகர்கள் பல கேள்விகளைக் கேட்டார்கள். குறிப்பாக அவரது ஹாபியில் தொடங்கி மிகவும் பிடித்த தமிழ் படம் வரை கேள்வி எழுப்பினார்கள். அவருக்கு மிகவும் பிடித்த தமிழ் படம் என்றால் அது 96 தான் எனக் கூறியுள்ளார். அவரது இந்த பதிலைக் கேட்ட ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்துள்ளது. 96 படம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற வெற்றிப் படம். இந்த படம் மாளவிகா மோகனனுக்கு பிடித்திருக்கு என்பதில் யாருக்கும் ஆச்சரியம் இல்லை.

ஆனால், மாளவிகா மோகனன் தமிழில் ரஜினிகாந்த், விஜய், விக்ரம் மற்றும் தனுஷ் என பல நடிகர்களுடன் நடித்துள்ளார். அந்தப் படங்களில் ஏதாவது ஒரு படத்தைக் கூறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தனர். ஆனால் மாளவிகா மோகனன் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடித்த 96 படத்தை பிடித்திருக்கு எனக் கூறியதால் ரசிகர்கள் கொஞ்சம் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். இவர் விஜய் உடன் நடித்த மாஸ்டர் படம் மாபெரும் வெற்றிப் படம் தான். ஆனாலும் அவர் அந்த படத்தின் பெயரைக் குறிப்பிடவில்லை. மேலும் கடந்த ஆண்டு மாளவிகா மோகனன் நடிப்பில் தங்கலான் படம் ரிலீஸ் ஆனது. இந்தப் படத்தில் ஆரத்தி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அவரது நடிப்பு பாராட்டுகளைப் பெற்றாலும் இவர் நடித்த பல காட்சிகள் படத்தில் இடம்பெறவில்லை என சில மாதங்களுக்கு முன்னர் பேட்டி ஒன்றில் ஆதங்கத்தை கொட்டி இருந்தார்.