சீயான் விக்ரம் நடிப்பில் ஆக்சன் த்ரில்லர் படமாக வீர தீர சூரன் உருவாகியுள்ளது. படத்தை பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா போன்ற ஹிட் படங்களை கொடுத்த எஸ்.யூ. அருண்குமார் இயக்கியுள்ளார். இந்த படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், வரும் 27ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மார்ச் 20ஆம் தேதி படத்தின் இசை மற்றும் ட்ரையெலர் வெளியீடு நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வீர தீர சூரன் படம் குறித்து படத்தை தயாரித்த ஷீபு தமீன்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில், “மிகவும் சிறப்பான தருணம். மிகவும் திறமை வாய்ந்த இயக்குநர் எஸ்.யூ. அருண்குமார் மிகவும் சிறந்த படைப்பாக வீர தீர சூரன் படத்தை சென்சாருக்கு முன் போட்டு காண்பித்துள்ளார். சீயான் விக்ரம் நடிப்பில் மிகவும் ராவ்வான கல்ட் கமர்ஷியல் படமாக உள்ளது. விக்ரமின் மிக சிறந்த படங்களில் ஒன்றாக உள்ளது. மார்ச் 27, 2025 திரையரங்குகளில் இடி போன்ற ஒலிக்கப்போகும் ரசிகர்களின் ஆராவரத்தையும், கைதட்டல்களையும் காண ஆவலாக இருக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த படத்தில் விக்ரம் காளி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். எஸ். ஜே. சூர்யா, மலையாள நடிகர் சித்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். மற்றொரு மலையாள நடிகர் சூரஜ் வென்ஜாரமூடு இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.
தற்போது வீர தீர சூரன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கும் வீர தீர சூரன் பார்ட் 2 முதலில் மார்ச் 27ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் ரிலீஸுக்கு முன்னர் முன் கதையாக வீர தீர சூரன் படத்தின் பார்ட் 1 உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
படத்துக்கு ஒளிப்பதிவு – தேனி ஈஸ்வர். இசை ஜி.வி. பிரகாஷ் குமார். படத்திலிருந்து ஏற்கனவே கல்லூரும், ஆத்தி அடி ஆத்தி என இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே டைட்டில் டீஸரும், இன்னொரு டீஸரும் வெளியாகி படம் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில் விக்ரம் கேரியிரில் கம்பேக் படமாக வீர தீர சூரன் இருக்கும் என ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.