விஜய்யின் ‘சச்சின்’ ஏப்ரல் 18-ம் தேதி மறு வெளியீடு செய்யப்படுகிறது என்று தயாரிப்பாளர் தாணு அறிவித்துள்ளார்.
விஜய் நடித்த ‘சச்சின்’ படம் மறு வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. ஆனால், இதன் வெளியீடு எப்போது என்பது தெரியாமலேயே இருந்தது. தற்போது ஏப்ரல் 18-ம் தேதி ‘சச்சின்’ வெளியாகும் என்று தயாரிப்பாளர் தாணு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
அதிகப்படியான திரையரங்குகளில் வெளியிடும் முயற்சியையும் மேற்கொண்டு வருகிறார் தாணு. சமீபத்தில் விஜய் நடித்த ‘கில்லி’ திரைப்பட மீண்டும் வெளியிடப்பட்டு மாபெரும் வெற்றியைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து பல்வேறு விஜய் படங்கள் மறுவெளியீடு செய்யப்பட்டு வருகிறது. இந்த வாரம் ‘பகவதி’ வெளியாகி இருக்கிறது.
ஏப்ரல் 18-ம் தேதி வெளியாகவுள்ள ‘சச்சின்’ பாடல்கள், காமெடி காட்சிகள் என அனைத்துமே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றவை என்பது நினைவுகூரத்தக்கது.
மறைந்த இயக்குநர் மகேந்திரனின் மகன் ஜான் இயக்கத்தில் விஜய், ஜெனிலியா, பிபாஷா பாசு, வடிவேலு, தாடி பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ‘சச்சின்’. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் உருவான இப்படத்தின் பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.