இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் பாரதிராஜா மாரடைப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார்.
இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா. அமெரிக்காவின் தெற்கு புளோரிடாவில் உள்ள பல்கலைக் கழகத்தில் நாடகக்கலை படித்து வந்த இவர், 1999-ம் ஆண்டு வெளியான ‘தாஜ் மஹால்’ திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்தப் படத்தை பாரதிராஜா இயக்கினார். இதைத் தொடர்ந்து, கடல் பூக்கள், வருஷமெல்லாம் வசந்தம், அல்லி அர்ஜுனா, ஈரநிலம், சமுத்திரம், அன்னக்கொடி என பல படங்களில் நடித்தார். கடைசியாக விருமன் என்ற படத்தில் நடித்திருந்தார்.
‘சாதுரியன்’ என்ற படத்தில் நடிக்கும்போது, அதில் நாயகியாக நடித்த மலையாள நடிகை நந்தனாவை காதலித்த மனோஜ் பாரதிராஜா, பெற்றோர் சம்மதத்துடன் அவரை 2006-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மதிவதனி, அர்த்திகா என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளன. இயக்குநராக வேண்டும் என்ற ஆசையில் இருந்த அவர், இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். பின்னர், 2023-ல் ‘கார்த்திகை திங்கள்’ என்ற படத்தை இயக்கினார். இதில் பாரதிராஜாவும் நடித்திருந்தார்.
தொடர்ந்து குணசித்திர வேடங்களில் நடித்து வந்த மனோஜுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் இருதய பிரச்சினை ஏற்பட்டது. இதனால் சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் அவருக்கு இருதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில், மாரடைப்புக் காரணமாக நேற்று அவர் திடீரென மரணமடைந்தார். அவர் மரணம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவரது உடல், சென்னை சேத்துபட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. உடலுக்கு உறவினர்கள், திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
நடிகரும் இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மகனுமான மனோஜ் பாரதி மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
தனது தந்தையின் இயக்கத்தில் தாஜ்மகால் திரைப்படம் மூலம் அறிமுகமாகி, சமுத்திரம், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம் எனத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தனக்கென அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் மனோஜ். இயக்கம் உள்ளிட்ட துறைகளிலும் முயன்று பார்த்தவர் மனோஜ்.
இளம் வயதில் அவர் எதிர்பாராதவிதமாக மறைந்துவிட்டது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. அன்பு மகனை இழந்து வாடும் இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மகனும், திரைப்பட நடிகருமான மனோஜ் பாரதிராஜா மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன். அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
மகனை இழந்து ஆற்றொண்ணா துயரில் வாடும் பாரதிராஜா அவர்கள் இத்துன்பத்தில் இருந்து மீண்டு வரும் வலிமையை அளிக்க இறைவனை வேண்டுவதுடன், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நடிகர் மனோஜ் மறைவிற்கு இசையமைப்பாளர் இளையராஜா வீடியோ வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார். “என்னுடைய நண்பன் பாரதியின் மகனான மனோஜ் குமார் மறைந்த செய்தியை கேட்டு மிகவும் அதிர்ந்து போனேன். என்ன சொல்வது? எனக்கு வார்த்தை வரவில்லை. இப்படி ஒரு சோகம் பாரதிக்கு நிகழ்ந்து இருக்க வேண்டாம். நிகழ்வதை நம்மால் தடுக்க முடியாது ஏற்றுக் கொள்ள முடியாது என்று காலம் விதித்து இருப்பதால் மனோஜின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்” என்று வீடியொ பதிவில் தெரிவித்துள்ளார்.