நடிகர் மனோஜ் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மறைந்த மனோஜ் பாரதி உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இயக்​குநர் பார​தி​ராஜா​வின் மகனும், நடிகரு​மான மனோஜ் பார​தி​ராஜா மாரடைப்பு காரண​மாக நேற்று (மார்ச் 25) உயி​ரிழந்​தார். அவருக்கு வயது 48. அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்களும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் வீட்டில் அஞ்சலிக்காக மனோஜின் உடல் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

இதனிடையே, இது குறித்து உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில், “திரைப்பட நடிகரும் – இயக்குநர் இமயம் பாரதிராஜா சாரின் அன்பு மகனுமான சகோதரர் மனோஜ் கே.பாரதி உடல்நலக்குறைவால் மறைந்த நிலையில், நீலாங்கரையில் உள்ள அவர்களது இல்லத்துக்கு சென்று, முதல்வருடன், மனோஜின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம். அவரைப்பிரிந்து வாடும் பாரதிராஜா சார் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆறுதலையும் – இரங்கலையும் தெரிவித்தோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெக தலைவர் விஜய், நடிகர் சூர்யா உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.