பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா நேற்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு கடந்த வாரம் பைபாஸ் சர்ஜரி செய்து வீட்டில் ஓய்வு எடுத்து வந்த மனோஜ் பாரதி ராஜா திடீரென உயிரிழந்தார். இவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
பாரதி ராஜாவின் மகனான மனோஜ், தனது அப்பாவைபோல சினிமாவில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க வேண்டும் என விருப்பப்பட்டார். இதற்காக பிளஸ் டூ படித்துக் கொண்டு இருந்த போதே படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, தனது ஆசையை அப்பாவிடம் சொல்ல அவர், மணிரத்தினத்திடம் உதவி இயக்குநராக சேர்த்துவிட்டார். சினிமாவில் நடிகராக வேண்டும் என ஆசைப்பட்ட பாரதிராஜாவால் இயக்குநராகிவிட்டதால், தனது மகனை ஹீரோவாக்கி அழகுப்பார்த்தார். மனோஜை ‘தாஹ்மகால்’ படத்தில் ஹீரோவாக நடிக்க வைத்தார். இதைத்தொடர்ந்து சமுத்திரம், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், பல்லவன், ஈர நிலம் ஆகிய படத்தில் ஹீரோவாக நடித்தார். இதைத்தொடர்ந்து, மகா நடிகன், சாதூர்யன், மாநாடு, விருமன் உள்ளிட்ட படங்களிலும் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மனோஜ் கடைசியாக கார்த்தியின் ‘விருமன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
கடந்த ஆண்டு தந்தை பாரதிராஜாவை வைத்து மார்கழி திங்கள் என்ற படத்தை இயக்கி இருந்தார். மனோஜூக்கு ஏற்கனவே இரண்டு சிறுநீரகமும் செயல் இழந்ததாக கூறப்படுகிறது. அதோடு அவருக்கு மாரடைப்பும் ஏற்பட கடந்த மாதம் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, மருத்துவமனையில் ஆறு நாட்களுக்கு முன் தான் வீடு திரும்பி, வீட்டில் ஓய்வு எடுத்து வந்த நிலையில், மனோஜ் நேற்று உயிரிழந்தார். மரணம் அடைந்த மனோஜின் உடல் நீலாங்கரையில் உள்ள பாரதி ராஜாவின் வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதில், திரைப்பிரபலங்கள் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்கள்.
நடிகர் மனோஜ் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மா சுப்பிரமணியம் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். அதே போல, நடிகரும், தவெக தலைவருமான விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். தனது நீலாங்கரை வீட்டில் இருந்து மாலை உடன் வந்த விஜய், நண்பர் சஞ்சய் உடன் சென்று மனோஜ் பாரதிராஜா உடலுக்கு மாலை அணிவித்தார்.
இதையடுத்து, மனோஜின் உடலுக்கு இறுதி சடங்குக்கான சடங்குகள் செய்யப்பட்டு நான்கு மணிக்கு மேல், கற்பகாம்பாள் தெரு வழியாக ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது. அவரது உடலுக்கு வழிநெடுகிலும் இருந்த மக்கள் மலர் தூசி அஞ்சலி செலுத்தினார்கள். மயானத்தில் மகனின் உடலைப்பார்த்த நடக்கமுடியாமல் நடந்து வந்த பாரதி ராஜா, மனோஜின் முகத்தை இறுதியாக பார்த்துவிட்டு கதறி அழுதார். அவருடன் இருந்த சேரன் அவருக்கு ஆறுதல் கூறி, அவரை இருக்கையில் இருந்தபடியே காரில் ஏற்றிகொண்டு சென்றுவிட்டனர். இதையடுத்து பெசன்ட் நகர் மின் மயானத்தில் மனோஜின் உடலுக்கு அவரின் இருமகளும் இறுதிசடங்குகளை செய்ததை அடுத்து, அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.